பிரத்தியேக அழைப்பை கோரி அங்கஜனுடன் முரண்பட்ட பிரதேச சபை உறுப்பினர்கள்..!

யாழ்ப்பாணம் மாவட்டம் தீவக பிரதேசங்களான வேலணை, ஊர்காவற்துறை மற்றும் நெடுந்தீவு ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கான அபிருத்தி கலந்துரையாடல் இன்று நடைபெற்றது. 

இந்த கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தலைமையில் வேலணை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. 

கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மகேசன், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் சமூகமட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த நிலையில் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனுக்கு, வேலணை,ஊர்காவற்துறை மற்றும் நெடுந்தீவு பிரதேச சபை உறுப்பினர்கள் சிலரினால் இடையூறு ஏற்படுத்தப்பட்டது. 

இந்த கலந்துரையாடலில் பங்கேற்க வந்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனிடம்  தங்களுக்கு பிரத்தியேக அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவித்து   பிரதேச சபை உறுப்பினர்கள்  கருத்து மோதலில் ஈடுபட்டனர்.

பிரதேச மக்களின் அபிவிருத்திக்காக முன்னெடுக்கப்படும் கலந்துரையாடல்களுக்காக யாருக்கும் பிரத்தியேக அழைப்புக்கள் விடுக்கப்படும் சம்பிரதாயங்கள் கிடையாது எனவும் மக்களின் அபிவிருத்தி மீது அக்கறை கொண்ட  சமூக ஆர்வலர்கள் மற்றும் சேவையாளர்கள்  விருப்பத்துடன் கலந்துக்கொள்ள முடியுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இதன் போது தௌிவுபடுத்தினார்

அத்துடன் எதிர்ப்பில்  ஈடுபட்டவர்களை இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்க வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இதன் போது கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும், தமக்கு பிரத்தியேக அழைப்பு விடுக்கப்படாமல் தாம் மக்களின்  அபிவிருத்திக் கலந்துரையாடலில் கலந்து கொள்ள போவதில்லை என தெரிவித்து குறித்த பிரதேச சபை உறுப்பினர்கள் அங்கிருந்து வௌியேறியுள்ளனர்.

இந்த சம்பவம் இடம்பெற்ற போது எமது செய்தியாளர் பதிவுசெய்த காட்சியையும் கீழே காணலாம் 

 

Leave a Reply

Your email address will not be published.