ஒருநாள் தொடரை கைப்பற்றியது இலங்கை

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 161 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற போட்டியில் நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன் பிரகாரம் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 345 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் தனது இரண்டாவது சர்வதேச ஒருநாள் சதத்தினை பெற்றுக்கொண்ட அவிஸ்க பெர்னாண்டோ 127 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 119 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டார்.

பந்துவீச்சில் செல்டன் கேட்ரெல் 4 விக்கெட்களையும் அல்சாரி ஜோசப் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

346 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத்தீவுகள் 39.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 184 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் தனது 16 ஆவது அரைச் சத்ததினை பூர்த்திசெய்த சாய் ஹோப் 51 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க மற்றும் லக்சன் சந்தகன் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தியதுடன் நுவன் பிரதீப் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

ஆட்டநாயகனாக அவிஸ்க பெர்னாண்டோ தெரிவானார்.

3 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டி எஞ்சிய நிலையில் இலங்கை 2-0 என்ற நிலையில் தொடரைக் கைப்பற்றியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.