‘தீவிரவாதிகள் தலைதூக்கி வருகின்றனர்’

வருகின்ற காலம் மிக சவாலான காலமாகும் எனத் தெரிவித்த முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஹுப் ஹக்கீம், நடைபெறவுள்ள தேர்தலில், எமது சமூகம் சார்ந்த அரசியல் பிரிதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்வது தொடர்பிலும், அதனை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பிலும் அவதானமாக இருக்க வேண்டும் என்றார்.

நீர்கொழும்பு-அல் – ஹிலால் மத்திய கல்லூரியின் நூற்றாண்டை முன்னிட்டு, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்விக் கண்காட்சி நிகழ்வில், நேற்று(26) பங்கேற்று உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்துரைத்த அவர், மஹர சிறைச்சாலையிலுள்ள பள்ளிவாசல், ஏப்ரல் குண்டுத் தாக்குதலின் பின்னர் மூடப்பட்டுள்ளது. தற்போது அங்கு வேறு மதச் சின்னங்களை வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து பிரதமரிடம் முறைப்பாடு செய்துள்ளோம். அவர், சிறைச்சாலைக்குப் பொறுப்பான அமைச்சரிடம் கலந்துரையாடி பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். விரைவில் இந்தப் பிரச்சினையைத் அவர்கள் தீர்ப்பார்கள் என எதிர்ப்பார்க்கிறோம் என்றார்.

இனங்களுக்கிடையில் இருக்கும் ஒற்றுமையை குலைக்கும் வகையில், எல்லா தரப்பிலிருந்தும் தீவிரவாதிகள் தலைதூக்கி வருகின்றனர். இவர்களைக் கையாள்வது இலகுவான விடயம் அல்லவென, நாடாளுமன்ற உறுப்பினர் ரஹுப் ஹக்கீம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.