ஓட்டங்களை வாரி வழங்கிய திசர : சென்னை அபார வெற்றி
சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்டில் ஐதராபாத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2-வது வெற்றியை பெற்றுள்ளது.
சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட்டில் நேற்றிரவு ராஞ்சியில் நடந்த 10-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ஐதராபாத் சன் ரைசர்ஸ் பலப்பரீட்சை நடத்தின.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஐதராபாத் முதலில் பந்துவீச முடிவு செய்தது.
இதன்படி சென்னை சூப்பர் கிங்சின் இன்னிங்சை முரளிவிஜயும், மைக் ஹஸ்சியும் தொடங்கினர். தொடர்ந்து 2-வது முறையாக ஓட்டம் எதுவும் பெறாத நிலையில் ஆட்டமிழந்தார் முரளிவிஜய்.
அடுத்து சுரேஷ் ரெய்னா களம் புகுந்தார். சிறிது நேரத்தில் ஹஸ்சி 23 ஓட்டங்களில் விக்கெட்டை ஆட்டமிழந்தார்.
ரெய்னா துரிதமான ஓட்ட சேகரிப்பில் ஈடுபட்டார். 20 ஒவர் கிரிக்கெட்டில் தனது 25-வது அரைசதத்தை கடந்த ரெய்னா, ஐதராபாத் பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். இதற்கிடையே பத்ரிநாத் 13 ஓட்டங்களில் வெளியேற, டோனி களம் கண்டார்.
சொந்த ஊர் இரசிகர்களின் முன்னிலையில் கடந்த ஆட்டத்தில் ஏமாற்றம் அளித்த டோனி, இந்த முறை மெகா விருந்தே படைத்து விட்டார்.
18-வது ஓவரை வீசிய வேகப்பந்து வீச்சாளர் திசர பெரேராவை டோனி, கதி கலங்க வைத்தார். அந்த ஓவரில் மட்டும் டோனி 5 சிக்சர்களை தூக்கியடித்து, இரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் மூழ்கடித்தார்.
இதில் ஒரு சிக்சர் 101 மீட்டர் தூரத்திற்கு பறந்தது. இந்த தொடரின் நீண்ட தூரம் ஓடிய சிக்சர் இது தான். அந்த ஓவரில் மட்டும் மொத்தம் 34 ஓட்டங்கள் (5 சிக்சர், ஒரு 2 ரன், 2 வைடு) வந்தது.
இதனால் சென்னை அணியின் ஓட்ட எண்ணிக்கை ராக்கெட் வேகத்தில் எகிறியது. அணியின் ஓட்ட எண்ணிக்கை 175 ஆக உயர்ந்த போது, ரெய்னா (84) ஆட்டமிழந்தார்.
டைசி ஓவரிலும் அசுரத்தனமான தாக்குதல் தொடுத்த டோனி, மேலும் இரு சிக்சர் விளாசினார். இதனால் சென்னை அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் 200 ஓட்டங்களை தொட்டது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 202 ஓட்டங்களை குவித்தது. சாம்பியன்ஸ் லீக்கில் சென்னை அணியின் அதிகபட்ச ஓட்டம் இதுவாகும்.
டோனி 63 ஓட்டங்களுடன் (19 பந்து) களத்தில் இருந்தார். இதில் ஒரு பவுண்டரியும், 8 சிக்சரும் அடங்கும்.
ஐதராபாத் தரப்பில் ஸ்டெயின், டுமினி நேர்த்தியாக பந்து வீசி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்திய போதிலும், திசர பெரேரா 3 ஓவர்களில் 60 ஓட்டங்களை வாரி வழங்கியிருந்தார்.
சாம்பியன்ஸ் லீக்கில் ஓர் இன்னிங்சில் அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுத்த மோசமான பந்து வீச்சாளர் வரிசையில் பெரேரா 3-வது இடத்தை பெற்றுள்ளார்.
பின்னர் கடினமான இலக்கை நோக்கி ஆடிய ஐதராபாத் அணிக்கு, தலைவர் ஷிகர்தவானும், பார்த்தீவ் பட்டேலும் அருமையான தொடக்கம் தந்தனர்.
முதல் விக்கெட்டுக்கு 88 ஓட்டங்களை சேர்த்த இந்த ஜோடியில் பட்டேல் 38 ஓட்டங்களுடனும், தவான் 48 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
பின்னால் வந்த துடுப்பாட்ட வீரர்களில் டேரன் சேமி (50) கடும் சவாலாக இருந்தார். என்றாலும் இலக்கை நெருங்க முடிந்ததே தவிர அதை தொட முடியவில்லை.
ஐதராபாத் அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 190 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.
சென்னை வீரர்களின் களத்தடுப்பு படுமோசமாக இருந்தது. பல பிடிகளை கோட்டை விட்டதால் தான், ஐதராபாத் அணி இவ்வளவு ஓட்டங்களை எடுத்து விட்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது 2-வது வெற்றியாகும். முதல் ஆட்டத்தில் டைட்டன்சை வென்றிருந்தது. தனது 3-வது ஆட்டத்தில் சென்னை அணி பிரிஸ்பேனுடன் நாளை மோதுகிறது.
நேற்றைய போட்டியின் சாதனைகள்:
இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் டோனி 16 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். இதன் மூலம் சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் வரலாற்றில் மின்னல் வேகத்தில் அரைசதம் அடித்தவர் என்ற சிறப்பை டோனி பெற்றார்.
இதற்கு முன்பு 2009-ம்ஆ ண்டு நியூ சவுத் வேல்சுக்கு எதிராக டிரினிடாட் அண்ட் டொபாக்கோ வீரர் கீரன் பொல்லார்ட் 18 பந்துகளில் அரைசதம் எடுத்ததே இந்த வகையில் சாதனையாக இருந்தது.
19 பந்துகளில் 63 ஓட்டங்களை திரட்டிய டோனியின் ஸ்டிரைக் ரேட் விகிதம் 331.51 ஆக இருந்தது. சாம்பியன்ஸ் லீக்கில் இதுவும் ஒரு வகையில் சாதனை தான்.
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா, சாம்பியன்ஸ் லீக்கில் 500 ஓட்டங்களை கடந்தார். அவர் இதுவரை 16 ஆட்டங்களில் ஆடி 518 ஓட்டங்களை எடுத்து அதிக ஓட்டங்கள் குவித்தோர் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளார்.
டேவிட் வார்னர் 556 ஓட்டங்களுடனும், பொல்லார்ட் 521 ஓட்டங்களுடனும் முதல் இரு இடங்களை வகிக்கிறார்கள்.
கருத்துகள் இல்லை