உலக கோப்பை ஹாக்கி தொடரில், ஜெர்மனி அணி 6வது முறையாகவும் சாம்பியன்
புதுடில்லி: ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடரில், ஜெர்மனி அணி 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதித்தது. நேற்றுமுந்தினம் நடந்த பைனலில், 5-2 என்ற கோல் கணக்கில் பிரான்சை தோற்கடித்தது.
டில்லியில், ஆண்களுக்கான 10வது ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி தொடர் நடந்தது. நேற்றுமுந்தினம் நடந்த பைனலில், "நடப்பு சாம்பியன்' ஜெர்மனி, பிரான்ஸ் அணிகள் மோதின. ஆட்டத்தின் 2வது நிமிடத்தில் ஜெர்மனியின் நிக்கோலஸ் வெல்லன் முதல் கோல் அடித்தார். இதற்கு, 16வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் காஸ்பர்டு பாம்கார்டன் ஒரு கோல் அடித்து, பதிலடி கொடுத்தார். முதல் பாதி முடிவில், போட்டி 1-1 என சமநிலை வகித்தது.
இரண்டாவது பாதியில் பிரான்ஸ் அணியின் காஸ்பர்டு பாம்கார்டன் 40வது நிமிடத்தில் இரண்டாவது கோல் அடித்தார். பின் சுதாரித்துக் கொண்ட ஜெர்மனியின் நிக்கோலஸ் வெல்லன் 44, 46வது நிமிடங்களில் அடுத்தடுத்து இரண்டு கோல் அடித்து முன்னிலை பெற்றுத் தந்தார். தொடர்ந்து அசத்திய ஜெர்மனி அணிக்கு ஜோனஸ் கோமால் (60வது நிமிடம்), கிறிஸ்டோபர் ரூர் (68வது நிமிடம்) தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். முடிவில், ஜெர்மனி அணி 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, 6வது முறையாக (1982, 85, 89, 93, 2009, 13) சாம்பியன் பட்டத்தை வென்றது.
முதன்முறையாக பைனலுக்கு தகுதி பெற்ற பிரான்ஸ் அணி, இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.
நெதர்லாந்து வெண்கலம்
நேற்றுமுந்தினம் நடந்த வெண்கலப் பதக்கத்துக்கான (3-4வது இடம்) போட்டியில், நெதர்லாந்து, மலேசியா அணிகள் மோதின. இதில் கோல் மழை பொழிந்த நெதர்லாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட ஆட்டநேர முடிவில் 7-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதனையடுத்து மூன்றாவது இடம் பிடித்த நெதர்லாந்து வெண்கலம் வென்றது. மலேசியாவுக்கு 4வது இடம் கிடைத்தது.
ஆஸி., அசத்தல்:பின், 5-6வது இடங்களுக்கான போட்டியில், ஆஸ்திரேலியா, பெல்ஜியம் அணிகள் மோதின. விறுவிறுப்பான போட்டி, நிர்ணயிக்கப்பட்ட ஆட்டநேர முடிவில் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தது. இதனையடுத்து, முடிவு "பெனால்டி ஷூட் அவுட்' முறைக்கு சென்றது. இதில் ஆஸ்திரேலிய அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, 5வது இடம் பிடித்தது. பெல்ஜியத்துக்கு 6வது இடம் கிடைத்தது.
நியூசி., வெற்றி:அடுத்து நடந்த 7-8வது இடங்களுக்கான போட்டியில் நியூசிலாந்து, தென் கொரியா அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய நியூசிலாந்து அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, 7வது இடம் பிடித்தது. தென் கொரியாவுக்கு 8வது இடம் கிடைத்தது.
ஜெர்மனி சாம்பியன்
பிரான்ஸ் 2வது இடம்
நெதர்லாந்து 3வது இடம்
மலேசியா 4வது இடம்
ஆஸ்திரேலியா 5வது இடம்
பெல்ஜியம் 6வது இடம்
நியூசிலாந்து 7வது இடம்
தென் கொரியா 8வது இடம்
பாகிஸ்தான் 9வது இடம்
இந்தியா 10வது இடம்
அர்ஜென்டினா 11வது இடம்
தென்ஆப்ரிக்கா 12வது இடம்
ஸ்பெயின் 13வது இடம்
இங்கிலாந்து 14வது இடம்
எகிப்து 15வது இடம்
கனடா 16வது இடம்
-----------------------------------------------
கருத்துகள் இல்லை