தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: கோஹ்லி அபார சதம்!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கோஹ்லியின் அபார சதத்தால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது. தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரில் 0-2 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் இரு அணிகள் இடையேயான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர்குமாருக்கு இடம் கிடைக்கவில்லை. அவர்களுக்கு பதிலாக ரஹானே, அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்ஹான் சேர்க்கப்பட்டனர். டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் டோணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
தொடக்க வீரர்களாக ஷிகர் தவானும், முரளிவிஜயும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர். எதிர்பார்த்தது போலவே தென்ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் பவுன்சர்களாக போட்டு தாக்கினர். ஸ்டெயின், இடுப்பளவுக்கு மேல் பந்தை வீசி திணறடித்தார். அவரது ஒரு பவுன்சர் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய தவான், அதே ஓவரில் அதே போன்று வீசப்பட்ட பந்தை தூக்கிய போது, பைன்லெக் திசையில் நின்ற தாஹிரிடம் கேட்ச் ஆகி போனார். அவர் 13 ரன்களுடன் அடுத்து புஜாரா வந்தார். மறுமுனையில் மிகுந்த எச்சரிக்கையுடன் ஆடிய தமிழகத்தின் விஜய், பெரும்பாலான பந்துகளை தொடவே தயங்கினார். ஒரு மணிநேரத்திற்கு மேலாக தாக்குப்பிடித்த போதிலும் அவரது ரன் எண்ணிக்கை மட்டும் உயரவே இல்லை. வெறும் 6 ரன்கள் எடுத்த நிலையில், விக்கெட் கீப்பர் டிவில்லியர்சிடம் கேட்ச் ஆனார். 24 ரன்னுக்குள் தொடக்க வீரர்களை இழந்து விட்டது இந்திய அணி!
ஆனால் 3-வது விக்கெட்டுக்கு களம் புகுந்த துணை கேப்டன் கோஹ்லியோ நிலைத்து ஆடினார். அவருடன் புஜாராவும் கை கோர்த்து நிதானமாக ரன்களைக் குவித்தனர்.24-வது ஓவரில் 50 ரன்களை தொட்ட இந்திய அணி 40-வது ஓவரில் 100 ரன்களை கடந்தது. இந்த கூட்டணியை உடைக்க தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர்.
இந்திய அணியின் ஸ்கோர் 113 ரன்களாக உயர்ந்த போது கோஹ்லி பந்தை அருகில் அடித்து விட்டு எதிர்முனையில் நின்ற புஜாராவை ஒரு ரன்னுக்கு அழைத்தார். அவரும் மின்னல் வேகத்தில் ஓடி வர, கோஹ்லியோ சில அடி தூரம் ஓடி விட்டு வேண்டாம் என்று பின்வாங்கினார். அதற்குள் புஜாரா ரன்-அவுட் செய்யப்பட்டார்.அடுத்து ரோஹித் ஷர்மா களம் இறங்கினார். தனது முதல் இரு இன்னிங்சிலும் வரிசையாக சதம் விளாசி சாதனை படைத்திருந்த ரோஹித் ஷர்மாவினால் விக்கெட்டை நீண்ட நேரம் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. 42 பந்தில் ஒரு பவுண்டரியுடன் 14 ரன்கள் எடுத்த அவர், வெரோன் பிலாண்டர் வீசிய அவுட்-ஸ்விங்கரை அடிக்க முயற்சித்த போது, விக்கெட் கீப்பர் டிவில்லயர்சிடம் கேட்ச் ஆனார்.
இதைத் தொடர்ந்து கோஹ்லியுடன் ரஹானே கைகோர்த்தார். இருவரும் நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை 200 ரன்களை கடக்க வைத்தனர். ஒருவழியாக கோஹ்லி தமது 5வது டெஸ்ட் சதத்தை கடந்தார். தென்னாப்பிரிக்கா மண்ணில் அவரது கன்னி சதம் இது. அணியின் ஸ்கோர் 219 ரன்களை எட்டிய போது கோஹ்லி 119 ரன்களில் ஆட்டம் இழந்தார்.டெண்டுல்கர் ஓய்வு பெற்ற பிறகு அவரது இடத்துக்கு தாம் சரியான தேர்வு என்பதை நிரூபிக்கும் வகையில் கோஹ்லி தமது ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.பின்னர் ரஹானேவுடன், கேப்டன் டோணி இணைந்தார். இருவரும் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினர். ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்துள்ளது. ரஹானே 43 ரன்களுடனும் டோணி 17 ரன்களுடனும் களத்தில் இருக்கின்றனர்
-----------------------------------------------
கருத்துகள் இல்லை