புத்திசாலி யானைகள்
பூமியில் வாழும் விலங்குகளில் மிகவும் புத்திசாலியான விலங்கு யானை ஆகும். சிங்கம் காட்டுக்கு ராஜாவாக இருந்த போதிலும் யானையைப் போன்று துணிச்சலானது என்று சொல்லிவிட முடியாது. யானை சுறுசுறுப்பானது அத்துடன் பெருந்தன்மை மிக்கது.யானையிடம் நீங்கள் அன்பு காட்டினால் அதனை எப்போதும் அது மறப்பதில்லை. பத்து, இருபது வருடங்கள் சந்திக்காமல் இருந்தாலும் அது உங்களை அடையாளங் கண்டு சந்தோஷப்படும்.
மனிதனைப் போலவே யானைகளும் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக வாழ்கின்றன. யானை 22 மாதங்கள் கருவைச் சுமக்கிறது.நான்கு கோடி ஆண்டுகளுக்கு முன் நைல் நதிக்கரைகளில் மெயெரித்திரியம் என்ற விலங்கு தோன்றியது. அது ஒரு பன்றியின் அளவாக இருந்தது. அதில் இருந்து இன்றைய யானைகள் உருவாகியதாக உயிரியலாளர்கள் கூறுகின்றார்கள்.
மணிக்கு நாற்பது கிலோமீற்றர் வேகத்தில் யானைகளால் ஓட முடியும். யானைகள் தமது தந்தங்களைக் கொண்டு பல தொழில்களைச் செய்கின்றன. மண்ணைத் தோண்டுகின்றன. எதிரிகளுடன் சண்டை இடுகின்றன. கனமான பொருட்களைத் தூக்கிச் செல்கின்றன. பெரிய நீர்நிலைகளைக் கடந்து செல்லும் போது தந்தங்களில் தமது குட்டிகளைச் சுமந்து செல்கின்றன.
தந்தங்கள் சில சமயங்களில் உடைந்துவிடும். அதனால் யானைகளுக்கு பாதகம் இல்லை. தும்பிக்கை தான் முக்கியமானது. இதன் மூலமே யானைகள் சுவாசிக்கின்றன. நீரை உறிஞ்சி வாய்க்குள் பீச்சிக் குடிக்கின்றன. தழைகளையும், குழைகளையும் ஒடித்து வாயில் போட்டுக் கொள்ளுகின்றன. அது மட்டுமல்ல சேற்றை வாரித் தமது முதுகில் போட்டுக்கொள்ளவும் தும்பிக்கைகளைப் பயன்படுத்துகின்றன. யானைகள் தமக்குள் பேசிக் கொள்ளும் திறன் வாய்ந்தவை. முனகல்கள் மூலமாகவும், உரக்கப் பிளிறுதல் மற்றும் பலவித ஓசைகள் மூலமாகச் செய்திகளைப் பரிமாற்றிக் கொள்கின்றன.
தாய் யானை தன் குட்டியைக் கொஞ்சுவது அற்புதமான காட்சியாக இருக்கும். உறவினர்களையும், நண்பர்களையும் சந்திக்கும் போது தும்பிக்கைகளைக் கோர்த்துக் கொண்டு குரல் எழுப்புகின்றன.நோயுற்ற யானைகளுக்கு சக யானைகள் உணவையும், நீரையும் எடுத்து வந்து ஊட்டும். நோயுற்ற யானைகளைத் தடவிக்கொடுத்து ஆறுதல் படுத்தும்.யானைகள் ஆதிகாலத்திலிருந்தே மனிதர்களுக்கு சேவகம் செய்து வருகின்றன.
-----------------------------------------------
Tamilus இன் பதிவுகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களுடை நண்பர்கள் வட்டத்திலும் பகிர்ந்து கொள்வதற்கு தவறாதீர் !
If you have some problem with this post you can add a comment below, or you can contact us on email (focuslankaATgmailDOTcom). Share this resource with your friends !
கருத்துகள் இல்லை