என் தலைவர் பிரபாகரன் பெயரை வைத்தேன் : விஜயகாந்
நான், மது குடித்துவிட்டு பேசுவதாக கூறுகின்றனர். தவறை எல்லாம் இவர்களே செய்துவிட்டு, என் மீது பழியை போடுகின்றனர். தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை திறந்துவிட்டு, மது குடித்தால் தவறு என கூறுவதா? என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
விஜயகாந்த்தின், இரண்டாவது மகன், சண்முக பாண்டியன், கதாநாயகனாக அறிமுகமாகும், சகாப்தம் திரைப்பட துவக்க விழா, சென்னை, விருகம்பாக்கத்தில் நேற்று நடந்தது. சினிமா இயக்குனர்கள், நடிகர்கள், தே.மு.தி.க., நிர்வாகிகள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நான் எதற்கும் பயப்படுவது கிடையாது. அதற்காக, கண்மூடித்தனமாக இருக்க மாட்டேன். எதற்கு பயப்பட வேண்டும்; எதற்கு பயப்படக் கூடாது என்பதை பார்த்து, செயல்படுவேன். நான் ஏதாவது பேசினால், பக்கத்திலேயே உட்கார்ந்து கேட்டது போல், கண், காது, மூக்கு வைத்து, பத்திரிகைகளில் எழுதி விடுகின்றனர். அதனால் தான், திடீரென செயற்குழு கூட்டத்தை அறிவித்தேன்.
இந்த விழாவிற்கும், மூன்று நாட்கள் முன்பாகத்தான் ஏற்பாடு செய்தேன். என் மகனுக்காக, இந்த விழாவில் பங்கேற்று இருக்கிறேன். முழு நேர அரசியல் தான் என் பணி. ஒரு மாதம், மகனுடன் இருந்து ஆலோசனை வழங்க இருக்கிறேன். சகாப்தம் படம் தொடர்பாக, என் மனைவி தான் இனிமேல் பேசுவார். என்னை பொறுத்தவரை, எல்லாமே, மக்கள் தான்.
தொண்டர்கள் என்கூட இருக்கும் வரை, என்னை யாரும் அசைக்க முடியாது. இதை நான் ஆணவமாக சொல்கிறேன். லோக்சபா தேர்தலுக்கு, இன்னும், நான்கு மாதம் இருக்கிறது. நாற்பது தொகுதிகளுக்கும் போட்டிபோட, கட்சியில் எத்தனையோ பேர் உள்ளனர். மக்களையும், தெய்வத்தையும் நம்பி, அரசியலுக்கு வந்துள்ளேன். இவர்களுடன் கூட்டணி வைக்கலாம், அவர்களுடன் கூட்டணி வைக்கலாம் என நினைத்து, நான் கட்சி ஆரம்பிக்கவில்லை.
எதிர்கட்சி துணைத் தலைவர் பதவி வேண்டாம் என, ராஜினாமா செய்தது போல, என்னை எதிர்த்துக் கொண்டு கேள்வி கேட்கும், எம்.எல்.ஏ.,க்களும், பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். நான் மது குடித்துவிட்டு பேசுவதாக கூறுகின்றனர். தவறை எல்லாம் இவர்களே செய்துவிட்டு, என் மீது பழியை போடுகின்றனர்.
குடித்தால் என்ன தவறு? தமிழகம் முழுவதும், மதுக்கடைகளை இவர்கள் தான் திறந்து வைத்துள்ளனர். என், முதல் மகனுக்கு, என் தலைவர் பிரபாகரன் பெயரை வைத்தேன். இரண்டாவது மகனுக்கு, முஸ்லிம் பெயரை வைக்க நினைத்தேன். தந்தை, தாய் இந்துவாக இருந்து, மகனுக்கு முஸ்லிம் பெயரை வைத்தால், பாஸ்போர்ட் எடுக்கும்போது பிரச்னை வரும் என்பதால், அதை தவிர்த்து விட்டோம்.
என் மகன், சண்டை, நடனம் கற்றுக் கொள்ளவில்லை. தைரியம் மட்டும் இருப்பதால், நடிக்க வந்துள்ளார். என் மைத்துனர் சுதீஷ் குறித்து, என்னென்னமோ சொல்கின்றனர். அவரைப் பற்றி, எனக்கு நன்றாக தெரியும். நான் மனதில் பட்டதை மட்டுமே பேசுவேன். கட்சியை வளர்ப்பது மட்டுமே என் பொறுப்பு. கட்சியை வளர்க்க நான் படும்பாடு, எனக்கும், என் தொண்டர்களுக்கும் மட்டுமே தெரியும். தொண்டர்களை மட்டுமே, நான் உரிமையோடு திட்டுவேன், அடிப்பேன்.
மற்றவர்களை, அடிக்க மாட்டேன்.
வீட்டில் யாராவது தவறு செய்தால் அவர்களை உரிமையோடு அடிப்பது இல்லையா? அதுபோலத் தான் என் தொண்டர்களை அடிக்கிறேன். தவறு செய்தால் தான் கோபம் வரும் என்பது, அனைவருக்கும் தெரியும். அந்த அடிப்படையில், கோபப்பட்டால், அதை அரசியல் நாகரிகம் இல்லை என்கின்றனர். இப்படி சொல்லி, சொல்லி தான் தமிழகத்தை மட்டுமின்றி, இந்தியாவையே பல அரசியல்வாதிகள் ஏமாற்றி வருகின்றனர். இவ்வாறு, விஜயகாந்த் பேசினார்.
-----------------------------------------------
கருத்துகள் இல்லை