இன்று கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் திருமணம் - கேரளாவில் உள்ள குருவாயூர் கோவிலில்...
குருவாயூர் கோவிலில் இன்று கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் திருமணம்
கேரள மாநிலத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்தார். ஐ.பி.எல்.போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் கைதாகி தற்போது ஜாமீனில் விடுதலையாகி உள்ளார்.
இவரும், ராஜஸ்தான் ராஜ குடும்பத்தை சேர்ந்த நயன் என்ற புவனேஸ்வரி குமாரி (வயது 23) என்பவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவகாரத்திற்கு இரு வீட்டாரின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்ததின் பேரில் இன்று அவர்களின் திருமணம் கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் இன்று நடந்தது.
கேரள பாரம்பரிய முறைப்படி இத்திருமணம் நடந்தது. இதில், ஸ்ரீசாந்தின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
மணமகள் நயன் என்ற புவனேஸ்வரி குமாரி ராஜஸ்தான் ராஜ குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் இன்று மாலை கொச்சியில் உள்ள லீராயல் மெரிடியன் ஓட்டலில் ராஜஸ்தான் ராஜ குடும்ப பாரம்பரிய முறைப்படி திருமண விழா நடத்தப்படுகிறது. இதிலும் முக்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்கிறார்கள்.
இத்திருமணம் பற்றி ஸ்ரீசாந்தின் உறவினரும் பிரபல பாடகருமான மது பாலகிருஷ்ணன் கூறும்போது, 'நயன் அவரது 13–வது வயதில் இருந்தே ஸ்ரீசாந்த் மீதும் அவரை திருமணம் செய்ய வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார். இதை அந்த வயதிற்கான ஆர்வக்கோளாறு என்றே பெற்றோர் கருதினர். ஆனால் அவர் வளர்ந்து இளமை பருவம் அடைந்த பின்பும் ஸ்ரீசாந்த் மீது அதே பாசத்துடன் இருந்தது பெற்றோருக்கு வியப்பை ஏற்படுத்தியது.
ஒரு முறை அவர் ஸ்ரீசாந்திடம் ஆட்டோகிராப் கேட்டு சென்ற போது அவரிடம் தனது விருப்பத்தை தெரிவித்தார். ஆனால் அவரோ தன்னிடம் ஆட்டோ கிராப் வாங்கும் மற்ற பெண்களை போல இவரும் பேசுவதாகவே கருதினார்.
பின்னர்தான் அந்த பெண் தனது குடும்பத்தினருக்கு தெரிந்தவர் என்பதையும், அவர் தன் மீது வைத்திருந்த பாசத்தையும் புரிந்து கொண்டார். அந்ததருணத்திற்கு பிறகே அவர்கள் இருவரும் அன்புடன் பழக தொடங்கினர்.
ஸ்ரீசாந்திற்கு சமீபத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளின் போதும் நயனின் குடும்பம் அவருக்கு ஆதரவாகவே இருந்தது. இதனால் தான் திருமணம் நடக்கிறது. ஸ்ரீசாந்திற்கு ஏற்பட்ட பிரச்சினைகள் விரைவில் விலகி நல்ல முடிவு ஏற்படும். அவரும் உயர்ந்த நிலைக்கு வருவார் என நம்புகிறேன்', என்றார்
-----------------------------------------------
கருத்துகள் இல்லை