நடிகையாகும் அனித்தா குப்புசாமி
தமிழ்நாடு செய்தித்துறை சார்பில் தயாரிக்கப்படும், தமிழக அரசின் சாதனை விளக்கம் செய்திப் படத்தில் கிராமிய பாடகி அனிதா குப்புசாமி நடிக்கிறார். தமிழ்நாடு செய்தித்துறை சார்பில் நேற்று சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இருக்கும் அம்மா உணவகத்தின் முன்பு தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் செய்திப்பட படப்பிடிப்பு நடந்தது. இதில் கிராமிய பாடல் புகழ் புஷ்பவனம் குப்புசாமியின் மனைவி அனிதா குப்புசாமி பங்கேற்று இருந்தார்.
அம்மா உணவகத்தின் சிறப்பினையும், முக்கிய அம்சங்களையும் அவர் கூறுவது போன்ற காட்சி பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர் நிருபரிடம் கூறியதாவது, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் ஏழைகளின் பசியை போக்குவதற்காக அம்மா உணவகங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு ரூ.1-க்கு இட்லி கிடைக்கிறது. ரூ.5-க்கு சாம்பார் சாதம் மற்றும் கறிவேப்பிலைசாதம் கிடைக்கிறது. 10 ரூபாய் இருந்தால் போதும் காலை, மதியம் என 2 வேளை ஒருவர் வயிறார சாப்பிடலாம். உலகம் இயங்குவதே வயிற்றுக்காக தான்.
பசி தான் மிகவும் கொடுமையான நோய் ஆகும். ஒருநாளைக்கு சராசரியாக தனிமனிதனுக்கு உணவுக்கென ரூ.100 வரை செலவாகிறது. உணவுக்காக கையேந்தி நிற்கும் பல மனிதர்களை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறது. ஆனால் இனி அந்த நிலைமை ஏற்பட போவதில்லை. உணவுக்காக இனி கையேந்தும் நிலை தமிழகத்துக்கு இல்லை.
சொந்த பணத்தில் அம்மா உணவகத்தில் கம்பீரமாக சாப்பிடலாம். யாரும் வெட்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. இந்த அம்மா உணவகத்தில் கறிவேப்பிலை சாதம் சாப்பிட்டேன். இது உண்மையிலேயே சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தயாரிக்கப்பட்டிருக்கிறது.கறிவேப்பிலை, புளி, உளுந்தம்பருப்பு என சரியான விகிதத்தில் சேர்க்கப்பட்டு இருக்கிறது. மேலும் துவரம்பருப்பு, கடலைபருப்பு போன்றவற்றை பொடியாக அரைத்து இந்த சாதத்தில் சேர்த்து இருக்கிறார்கள்.இந்த உணவு வைட்டமின் சத்துக்கள் அடங்கிய உணவாகவும் இருக்கிறது. பசியோடு இங்கு வரும் மக்கள் வயிறும், மனதும் நிறைந்து வெளியே செல்வதை பார்க்க சந்தோஷமாக இருக்கிறது.
-----------------------------------------------
கருத்துகள் இல்லை