டோனி நம்பும் ஜோதிடம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசனின் ஜோதிடர் அணியின் தலைவர் டோனிக்கு அவ்வப்போது அறிவுரை வழங்கி வந்துள்ளார். விளையாட்டுத் துறையில் உள்ளவர்கள் சில மூடப் பழக்க வழக்கங்களை கொண்டுள்ளனர். குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் ஒவ்வொரு போட்டிக்கும் முன்பும் மாமியார், மருமகள் சம்பந்தப்பட்ட தொலைக்காட்ட்சித் தொடர் பார்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். இலங்கை பந்து வீச்சாளர் மலிங்கா ஒரு போட்டியில் பந்தை குறைந்தது 50 முறையாவது முத்தமிடுவார். இந்நிலையில் இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டிகளின்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளரும், இந்திய மட்டைப்பந்து கட்டுப்பாட்டு வாரிய தலைவருமான சீனிவாசனின் ஜோதிடர் வெங்கடேசன் கார்த்திகேயன் தலைவர் டோனிக்கு அறிவுரை வழங்கியுள்ளாராம்.
சென்னை அணி வீரர்களின் உடைமாற்றும் அறையில் குறிப்பிட்ட சுவர்களில் குறிப்பிட்ட சில தெய்வங்களின் புகைப்படங்களை மாட்டி வைக்க ஜோதிடர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார். அவர் கூறியவாறே செய்துள்ளார்களாம்.சென்னை அணி விளையாடும் போது அணி நிர்வாகத்தினர் நீல நிற டி-சர்ட் அணிய வேண்டும், எதிர் அணியினருக்கு சிவப்பு நிற துண்டுகள் கொடுக்க வேண்டும் என்று வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் சூதில் சிக்கி கைதான குருநாத் மெய்யப்பனை சென்னை அணி விளையாடிய இரண்டு போட்டிகளை நேரிலோ அல்லது தொலைகாட்சியிலோ, கணினியிலோ பார்க்கவே கூடாது என்று ஜோதிடர் தெரிவித்துள்ளார். மெய்யப்பனும் அவ்வாறே நடந்துள்ளார். அவர் பார்க்காத 2 போட்டிகளிலும் சென்னை அணி வெற்றி பெற்றது. 2010ம் ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியின்போது சென்னை அணி இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள தரம்சாலாவில் இருந்து காலிறுதி போட்டி நடக்கும் மும்பைக்கு செல்வதற்கு பதில் சென்னை வந்துள்ளது. காரணம் அன்றைய தினம் மும்பைக்கு செல்ல நல்ல தினம் இல்லையாம். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் டோனி தான் ஜோதிடரின் அறிவுரையை நாடினாராம்.
-----------------------------------------------
கருத்துகள் இல்லை