டிவில்லியர்சிடம் முதலிடத்தை இழந்தார் கோலி
தென்ஆப்பிரிக்காவுடனான ஒருநாள் தொடரை 0-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்ததையடுத்து, ஐசிசி ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், இந்திய இளம் பேட்ஸ்மேன் விராட் கோலி, டிவில்லியர்சிடம் முதலிடத்தை இழந்தார். இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பு, இரண்டாம் இடத்தில் இருந்த டிவில்லியர்ஸ் இப்போது முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
டிவில்லியர்ஸ் 872 ரேட்டிங் புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தை பிடித்தது மட்டுமல்லாமல், கோலியைவிட 13 ரேட்டிங் புள்ளிகள் அதிகம் பெற்றிருக்கிறார். இந்த ஆண்டின் ஐசிசி டெஸ்ட் மற்றும் ஒருநாள் கனவு அணியில் இடம்பிடித்துள்ள டிவில்லியர்ஸ், ஐசிசி டெஸ்ட் தரவரிசையிலும் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன் தரவரிசையில், இந்திய அணியின் கேப்டன் டோனி 6-வது இடத்தில் நீடித்தாலும், மற்ற வீரர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர். ஷிகர் தவான 9-வது இடத்தில் இருந்து 10-வது இடத்திற்கும், ரோகித் சர்மா 15-வது இடத்தில் இருந்து 18-வது இடத்திற்கும், ரெய்னா 19-வது இடத்தில் இருந்து 23-வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
அணிகள் தரநிலையைப் பொருத்தவரையில், இந்தியா 2 ரேட்டிங் புள்ளிகள் சரிந்து 120 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. ஒருநாள் தொடரில் வெற்றி பெற்றதால் 3 புள்ளிகளை பெற்ற தென் ஆப்பிரிக்க அணி, 110 புள்ளிகளுடன் 5-ம் இடத்தில் தொடர்கிறது.
பந்துவீச்சிலும் இந்திய வீரர்களுக்கு சரிவு ஏற்பட்டது. இன்று வெளியான தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா 3-வது இடத்தில் இருந்து 7-வது இடத்திற்கும், ரவிச்சந்திரன் அஸ்வின் 14-வது இடத்தில் இருந்து 17-வது இடத்திற்கும் சென்றனர்.
-----------------------------------------------
கருத்துகள் இல்லை