மனைவிக்கு உடல் நலக்குறைவு என பொய் காரணம் கூறியதாக சர்ச்சை
மனைவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறி, நடிகர் சஞ்சய் தத்துக்கு மீண்டும் ஒருமாத காலம் பரோல் வழங்கப்பட்டது குறித்து, விசாரணை நடத்துமாறு மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதை 5 ஆண்டுகளாக குறைத்து சுப்ரீம் கோர்ட் மார்ச் மாதம் உத்தரவிட்டது. இதைத்தொட ர்ந்து, மே 16ம் தேதி அவர் தடா கோர்ட்டில் சரண் அடைந்தார். அன்றே ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார்.
சஞ்சய் தத் விசாரணை கைதியாக இருந்தபோது, ஒன்றரை ஆண்டுகளை சிறையில் கழித்துவிட்டார். எனவே, எஞ்சியுள்ள மூன்றரை ஆண்டுகளை அவர் எரவாடா சிறையில் கழிக்க வேண்டும்.
இந்நிலையில், மனைவி மான்யாதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியிருப்பதாகவும், அதற்காக மீண்டும் ஒரு மாதம் பரோலில் விடுதலை செய்ய வேண்டும் என்று சஞ்சய் தத் விண்ணப்பித்தார்.
இதையடுத்து, மும்பை போலீஸ் துணை கமிஷனர் மற்றும் சிறை கண்காணிப்பாளர் செய்த பரிந்துரையை ஏற்று, புனே மண்டல கமிஷனர் பிரபாகர் தேஷ்முக் சஞ்சய் தத்தை ஒருமாத பரோலில் விடுதலை செய்ய ஒப்புதல் அளித்தார். இந்நிலையில், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் மான்யாதா, வியாழக்கிழமை இரவு நடிகர் ஷாகித் கபூர் நடித்த படத்தின் பிரிமியர் காட்சியை நண்பர்களுடன் சென்று பார்த்தார். இதுதொடர்பாக, ஊடகங்கள் படங்களுடன் செய்தி வெளியிட்டிருக்கின்றன.
மான்யதாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாக சஞ்சய் தத் கூறியது பொய் என்றும், அவருக்கு சிறை நிர்வாகமும் அதிகாரிகளும் சலுகை காட்டுவதாகவும் சர்ச்சை எழுந்திருக்கிறது.
-----------------------------------------------
கருத்துகள் இல்லை