நடிகரும் அமைச்சருமான சிரஞ்சீவி இராஜினாமா
தெலுங்கானா விவகாரத்தால் அதிருப்தி அடைந்த சிரஞ்சீவி, தனது இந்திய மத்திய அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார். ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க இந்திய மத்திய அமைச்சரவை நேற்றுமுன்தினம் ஒப்புதல் அளித்தது. இதுதொடர்பான வரைவு ஆந்திரா மறுசீரமைப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இனிமேல், இம்மசோதா, ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் ஆந்திர சட்டசபையின் ஒப்புதலுக்காக அதை அனுப்பி வைப்பார். இந்நிலையில், தெலுங்கானா பிரிவினை காரணமாக அதிருப்தி அடைந்த, சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த மத்திய சுற்றுலாத்துறை அமைச்சரும், நடிகருமான சிரஞ்சீவி நேற்று தனது பதவியை இராஜினாமா செய்தார்.
இதுதொடர்பாக அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பி வைத்தார். அக்கடிதத்தில் சிரஞ்சீவி கூறியிருப்பதாவது,
ஆந்திர மாநில பிரிவினை விவகாரத்தில், தொடர்ந்து நடந்து வரும் சம்பவங்களால் நான் வேதனை அடைந்துள்ளேன். மேலும், சீமாந்திரா பகுதி மக்களின் கருத்துகளோ அல்லது உணர்வுகளோ சமீபத்திய மத்திய அமைச்சரவை தீர்மானத்தில் கவனத்தில் கொள்ளப்படவில்லை. இதனால் நான் மேலும் வேதனை அடைந்துள்ளேன்.
எனவே இந்த சூழ்நிலையில், கனத்த இதயத்துடனும், மனசாட்சி உறுத்தலுடனும் பணியாற்றுவது கடினம். நான் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் ஏற்கனவே கடந்த அக்டோபர் 4ம் திகதி இராஜினாமா கடிதம் கொடுத்துள்ளேன். அந்த கடிதத்தை உடனடியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என பிரதமரை கேட்டுக் கொள்ளுங்கள்.
என் மீது தாங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கும், கொடுத்த பொறுப்புக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதைக் கொண்டு என்னால் இயன்ற அளவு பணியாற்றி இருக்கிறேன் என்று சிரஞ்சீவி கூறியுள்ளார்.
இதற்கிடையே, தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் 4 பேர் நேற்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்தனர். அப்போது, ‘தெலுங்கானா மசோதாவுக்கு ஆந்திர சட்டசபையின் ஒப்புதலை பெறுவதற்கான நடவடிக்கைகள், சரி வர பின்பற்றப்படவில்லை. இதற்கு பின்னணியில் அரசியல் சதி உள்ளது. ஆகவே, தாங்கள் இவ்விவகாரத்தில் நியாயமான முடிவு எடுக்க வேண்டும்’ என்று அவர்கள் கூறினர்.
-----------------------------------------------
கருத்துகள் இல்லை