2013 இல் திரையுலக நாயகர்கள் யார் எங்கே....
கமல்-விஸ்வரூபம்
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் படம் இந்த ஆண்டில் வெளிவரவில்லை. கலைஞானி கமலஹாசனின் ‘விஸ்வரூபம்’ படம் பல்வேறு தடைகளுக்கு பின் வெளியான வசூலில் அபார சாதனை படைத்து அவரின் விஸ்வரூபத்தை பறை சாற்றியது.
சூர்யா-சூப்பர்
கமல், ரஜினி ஆகியோருக்கு அடுத்த தலைமுறை நடிகர்களில் அஜீத், விஜய், சூர்யா, விக்ரம் ஆகியோரில் பெண்களை அதிக அளவு ரசிகர்களாக கொண்டிருக்கும் சூர்யாவுக்கு இந்த வருடம் சூப்பரான வருடம் என்றே கூறவேண்டும். இவரது ‘சிங்கம்-2’ அதிக வசூலை குவித்து மிகப்பெரிய சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.
அஜீத்-அபாரம்
அஜீத் நடிப்பில் ஊழல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை மையமாக கொண்டு வெளிவந்த ‘ஆரம்பம்’ மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக வெளிநாடுகளில் ‘எந்திரன்’ மற்றும் ‘விஸ்வரூபம்’, ‘சிவாஜி’ மற்றும் ‘தசாவதாரம்’ ஆகிய படங்களுக்கு அடுத்தபடியாக 2.5 கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகி சாதனை படைத்தது. தமிழகத்தில் மட்டும் இப்படம் 60 கோடிக்கு மேல் வசூலை குவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்யா-ஆச்சரியம்
ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்றில்லாமல் மற்ற நடிகர்களோடு இணைந்து நடித்து தனது திறமையான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துவரும் ஆர்யா 2013-ம் வருடத்தில் ஆச்சரியமான நடிகராகதான் தெரிகிறார். அஜித்துடன் இணைந்து ‘ஆரம்பம்’, ஜெய் உடன் இணைந்து ‘ராஜா ராணி’ ஆகிய படங்களில் நடித்து ஸ்கோர் செய்த ஆர்யாவுக்கு ‘இரண்டாம் உலகம்’ மட்டுமே சற்று சரிவை கொடுத்துள்ளது.
விஜய்-சுமார்
அஜித்துக்கு போட்டியாக கருதப்படும் விஜய்யின் ‘தலைவா’ படமும் பல்வேறு தடைகளுக்கு மத்தியில் வெளியாகி சுமாரான வெற்றியை பெற்றது. இந்த ஆண்டை பொறுத்தவரை விஜய்க்கு சற்று இறங்குமுகம் என்றே சொல்லவேண்டும்.
விஷால்-துடிப்பு
தனது துடிப்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வந்த விஷாலுக்கு தொடர் தோல்விக்கு பின் சுமாராக ஒடிய ‘பட்டத்து யானை’ மற்றும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த ‘பாண்டிய நாடு’ ஆகிய படங்கள் அவருக்கு மறுபடியும் உற்சாகத்தை வரவழைத்துள்ளது. அதே உற்சாகத்தோடு பல்வேறு படங்களில் சுறுசுறுப்பாக நடித்துக்கொண்டிருக்கிறார்.
விக்ரம்-வீழ்ச்சி
தனது நடிப்பாற்றலால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ள சீயான் விக்ரமிற்கு இந்த ஆண்டு வீழ்ச்சி என்று தான் சொல்லவேண்டும். இந்த ஆண்டு வெளிவந்த ‘டேவிட்’ படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாதததே அதற்கு முக்கிய காரணம்.
இளம் நடிகர்களில் சிம்புவின் படம் எதுவும் இந்த ஆண்டில் வெளிவரவில்லை.
தனுஷ்-சரிவு
தனுஷ் நடிப்பில் இந்தியில் வெளியாகி பெரும்வெற்றி பெற்ற ‘ராஞ்சனா’ படம் தமிழில் பொழிமாற்றம் செய்யப்பட்டது. இப்படத்திற்கு தமிழகத்தில் பெரிய வரவேற்பில்லாமல் போனது. தனுஷின் அபாரமான நடிப்பாற்றலை வெளிப்படுத்திய ‘மரியான்’ படமும் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெற முடியவில்லை. ‘நய்யாண்டி’ படம் மட்டுமே சுமாரான வெற்றியை பெற்றது.
புதுமுகங்களில் புகழ் பெற்றவர்கள்
இந்த ஆண்டில் புதுமுக நடிகரான சிவகார்த்திகேயனுககு ‘எதிர்நீச்சல்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்து, தயாரிப்பாளர்களின் நடிகராக அவதாரமெடுத்திருக்கிறார். தற்போது ஹன்சிகாவுடன் இணைந்து ‘மான் கராத்தே’ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சுமார் மூஞ்சி குமாரான விஜய் சேதுபதி கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தனது திறமையான நடிப்பினால் சூப்பர் நடிப்பு குமாராக வலம் வருகிறார்.
குணச்சித்திர வேடங்களில் கலக்கிய சத்யராஜ் மற்றும் பார்த்திபன்
கடந்த காலங்களில் மிகப்பெரிய ஹீரோவாக வலம் வந்த சத்யராஜ் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து கலக்கிவருகிறார். ‘தலைவா’, ‘ராஜா ராணி’ மற்றும் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ஆகிய படங்களில் சிறப்பாக நடித்து ரசிகர்கள் தனக்குரிய இடத்தை தக்கவைத்து கொண்டிருக்கிறார்.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு கரு.பழனியப்பனின் ‘ஜன்னல் ஓரம்’ படத்தில் நடித்த பார்த்திபன் தனது நக்கல் நடிப்பை மறுபடியும் ரசிகர்களுக்கு விருந்தாக கொடுத்திருக்கிறார். வருங்காலங்களிலும் தங்களது வித்தியாசமான நடிப்பின் மூலம் இவர்கள் இருவரும் ரசிகர்களை மகிழ்விப்பார்கள் என்று நம்புவோம்.
-----------------------------------------------
கருத்துகள் இல்லை