கோமாவில் ஷூமேக்கர்... இன்று 45வது பிறந்த நாள்.. குடும்பத்தினர், ரசிகர்கள் உருக்கம்!
7 முறை பார்முலா ஒன் போட்டி சாம்பியனாக, முடிசூடா மன்னனாக வலம் வந்த மைக்கேல் ஷமேக்கர் தொடர்ந்து கோமாவில் இருக்கிறார். இன்று அவரது 45வது பிறந்த நாளாகும். ஆனால் ஷூமேக்கர் கோமாவில் இருப்பதால் அவரது ரசிகர்கள் இந்த நாளை மிகவும் அமைதியாக, ஷூமேக்கர் புகழை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.
ஷூமேக்கரின் இணையதளத்தில் அவரைப் புகழ்ந்து அவரது குடும்பத்தினர் செய்தி வெளியிட்டுள்ளனர். ஷூமேக்கர் ஒரு போராளி. அவர் அவ்வளவு சீக்கிரம் இந்த உயிர்ப் போராட்டத்தையும் விட்டுக் கொடுக்க மாட்டார் என்று அவர்கள் புகழ்ந்துள்ளனர். ரசிகர்களுக்கும் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பிரான்ஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலையில் பனிச்சறுக்கில் ஈடுபட்டபோது திடீரென தடுமாறி விழுந்து பாறையில் தலை மோதியதில் படுகாயமடைந்த ஷூமேக்கர் தற்போது பிரெஞ்சு மருத்துவமனையில் கவலைக்கிடமான வகையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது நினைவிருக்கலாம்.
மைக்கேல் ஷூமேக்கரின் குடும்பத்தினர் அவரது இணையதளத்தில் விடுத்துள்ள செய்தியில், ஷமேக்கருக்காக பிரார்த்தனை செய்து வரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.மேலும் அவர்கள் கூறுகையில், உலகெங்கும் ஷூமேக்கருக்காக பிரார்த்தனை செய்யும், விரைவில் குணமடைய வேண்டி செய்திகளை அனுப்பி வரும் அனைவருக்கும் எங்களது நன்றிகள். இது எங்களுக்குப் பெரும் பலமாக இருக்கிறது. ஷூமேக்கர் ஒரு போராளி. அவ்வளவு சீக்கிரம் எதையும் விட்டுக் கொடுக்க மாட்டார். இந்தப் போராட்டத்திலும் அவர் விட்டுக் கொடுக்க மாட்டார், வெல்வார். நன்றி என்று தெரிவித்துள்ளனர்.
பார்முலா 1 கார்ப் பந்தயத்தின் ஹீரோவாக வலம் வந்தவர் ஷூமேக்கர். 7 முறை சாம்பியன் பட்டம் வென்றவர். அசைக்க முடியாத கார்ப்பந்தய வீரராக திகழ்ந்தவர். உலகெங்கும் கோடிக்கணக்கான இளைஞர்களை வசீகரித்த பந்தய வீரர் ஷூமேக்கர் விபத்துக்குள்ளானபோது அவரது தலையில் போட்டிருந்த ஹெல்மட்டின் தரம் தற்போது சர்ச்சைக்குள்ளாகியது. பாறையில் மோதிய வேகத்தில் அவரது ஹெல்மட் இரண்டாக உடைந்து சிதறி விட்டதாம். இதனால் ஹெல்மட்டின் தரம் குறித்து சர்ச்சை கிளம்பியுள்ளது. அதுகுறித்தும் பிரெஞ்சு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே ஷூமேக்கர் பல வருடம் இணைந்து கார்ப்பந்தயங்களில் பங்கேற்ற பெராரி எப் ஒன் அணியைச் சேர்ந்த நிர்வாகத்தினர், வீரர்கள் அனைவரும் இன்று ஷூமேக்கர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை முன்பு கூடி அமைதி கூட்டம் நடத்தவுள்ளனர்.ஷூமேக்கருக்கு அருகிலேயே அவரது மனைவி கோரின்னா, இரு குழந்தைகள், தந்தை, தம்பி ஆகியோர் உடன் இருந்து வருகின்றனர்.
ஷூமேக்கருக்கு உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால் அவரது உடல் நலம் குறித்த செய்திகளைச் சேகரிக்க மருத்துவமனை அருகிலேயே பல்வேறு மீடியாக்களைச் சேர்ந்தவர்கள் குவிந்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் மாறு வேடத்தில் மருத்துவமனைக்குள் ஊடுறுவ முயன்று பரபரப்பையும் ஏற்படுத்தினர். பாதிரியார் போல ஒரு செய்தியாளர் உள்ளே போய் தடுத்து நிறுத்தப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.
கருத்துகள் இல்லை