அனிருத்தை மையப்படுத்தும் ஆக்கோ
கொலவெறி பாடல் மூலம் அறிமுகமாகி புகழ் பெற்றவர் இசையமைப்பாளர் அனிருத். இவர் தமிழில் ‘3’, ‘எதிர் நீச்சல்’, ‘வணக்கம் சென்னை’ உள்ளிட்ட பல படங்களில் இசையமைத்துள்ளார். இளம் இசையமைப்பாளர்களில் புகழ் பெற்ற இவரைத்தேடி நடிக்க வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறதாம். அதை எல்லாம் தட்டி கழித்துக்கொண்டே வந்தாராம் அனிருத்.
இசைக்கு மட்டுமே முன்னுரிமை என்பதில் திட்ட வட்டமாக இருக்கும் அனிருத், அதை உரக்கச் சொல்லியும் வந்தார். ஆனால் தற்போது ‘ஆக்கோ’ என்னும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் அனிருத் படம் வெளிவந்துள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் பலர், அனிருத் இப்படத்தில் நடிப்பதாக பேசிக்கொண்டனர். ஒருசிலர், அனிருத் நடிப்பதற்கு ஒத்திகை பார்ப்பதாகவும் கதை கட்டினர்.
அதைப்பற்றி அவரிடம் கேட்டபோது, ஆக்கோ படத்தின் கதை நான் மிகவும் ரசித்து கேட்டு வியந்த கதை. இந்தப்படத்தில் என்னுடைய பங்களிப்பு ஒரு இசையமைப்பாளராக மட்டுமே, என்று கூறி மிகச்சிறந்த பாடல்களையும் இசையமைத்து கொடுத்திருக்கிறேன் என்றார்.
இவர் இசையமைத்த விதம் இயக்குனர் ஷாம் குமாருக்கு பிடித்துப்போக, அனிருத் இந்தப் படத்தில் நடிக்கவில்லை என்றாலும் படத்தை விளம்பரப்படுத்தும் வீடியோவில் அனிருத்தை பிரதானப்படுத்தியிருக்கிறது படக்குழு.
படத்தை பற்றி இயக்குனர் ஷாம் குமார் கூறும் போது “ஆக்கோ என்னும் சொல்லுக்கு ‘ஆர்வ கோளாறு’ என்று பொருள். மூன்று ஆர்வ கோளாறு இளைஞர்களின் ஆர்வத்தால் ஒரு இரவில் நடக்கும் சம்பவங்களின் சுவாரஸ்யமே ‘ஆக்கோ’ படத்தின் கதை என்கிறார் இயக்குனர்.
ஆக்கோ நகைச்சுவை கலந்த ஒரு ஆக்ஷன் படம். இந்தப்படம் எல்லாத் தரப்பு மக்களுக்கும் பிடித்த படமாக இருக்கும். எல்லோரையும் எப்போதும் கவரும் படம் இது. அனிருத்தின் பாடல்கள் 2014 ஆண்டின் மிக சிறந்த பாடல்களாக இருக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை” என்கிறார்.
-----------------------------------------------
கருத்துகள் இல்லை