முள் படுக்கையில் தவம்: சாமியார் முன் குவியும் பக்தர்கள்
சிவகங்கை: மானாமதுரை அருகே முள்படுக்கையில் அமர்ந்து தவம் செய்யும் சாமியாரிடம் அருள் வாக்கு கேட்க ஏராளமான பக்தர்கள் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள லாடனேந்தல் கிராமம் மதுரை&ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
இங்கு அருள்மிகு பூங்காவன முத்துமாரியம்மன் கோயில் பூசாரியாக நாகராணி என்ற 50 வயது பெண்மணி உள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் முள் படுக்கையில் அமர்ந்து இவர் குறி சொல்வது வாடிக்கை. இதற்காக காடுகளில் இருந்து உடை முள், இலந்தை முள், காட்டு கருவேல முள் உள்ளிட்ட ஏழு வகை முட்கள் கொண்டு வரப்பட்டு கோயில் முன் அமைந்திருக்கும் மைதானத்தில் 5 அடி உயரத்தில் அமைக்கப்படுகிறது.
முள் படுக்கையில் ஏறுவதற்கு வசதியாக மர ஏணியும் அமைக்கப்படுகிறது. மார்கழி 18ம் நாள் அதிகாலையில் ஈரத்துணியுடன் கோயிலை வலம் வந்த நாகராணி பின் அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பூஜைகள் நடை செய்கிறார். அதன்பின் கோயிலின் மேற்கு பகுதியில்புதிதாக அமைக்கப்பட்ட மாசானியம்மனுக்கு பூஜைகள் செய்துவிட்டு ஆவேசம் வந்தது போல சாமியாடுகிறார் நாகராணி. பின் முள் படுக்கைக்கு பூஜைகள் அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. முள் படுக்கையை மூன்று முறை வலம் வந்து மர ஏணியில் ஏறி ஆடுகிறார்.
திடீரென்று முள் படுக்கையில் சாஷ்டாங்காக மல்லாக்க படுக்கிறார். சுமார் ஒருமணி நேரம் ஆடாமல் அசையாமல் படுத்து கிடக்கிறார். பக்தர்கள் கூட்டம் மெய் மறந்து கோசமிடுகிறது. ஒரு மணி நேர தவம் முடிந்த பின் எழுந்து நின்று சாமியாடுகிறார். பின் ஒவ்வொருவராக வந்து அருள் வாக்கு கேட்கின்றனர். அவர்களுக்கு எல்லாம் வரிசையாக சொல்லி முடிக்கிறார். அதன்பின்பு தீபாராதனை காட்டப்படுகிறது.
இது சாமி மலையேறிவிட்டதாக அர்த்தம். பின் நாகராணி கீழே இறங்கி வந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவதுடன் இந்தாண்டு மார்கழி திருவிழா முடிவடைகிறது. இதற்காக கோயில் வளாகத்தில் தற்காலிக பந்தல் அமைப்பதுடன் பிரம்மாண்டமான யாகசாலை பூஜைகளும் நடக்கின்றன. மாலையில் அன்னதானத்துடன் மார்கழி மாத முள்படுக்கை தவம் முடிவடைகிறது.
கருத்துகள் இல்லை