இந்திய - இலங்கை மகளிர் ஓவர் கிரிக்கட் தொடர்ந்தும் அணித் தலைவி ஷஷிகலா சமரி அத்தப்பத்து
உலக இருபதுக்கு 20 மகளிர் கிரிக்கட் போட்டிகள் இவ் வருடம் மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை மகளிர் கிரிக்கட் அணி இன்னும் சில தினங்களில் இந்தியாவுக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளது
அங்கு மூன்று மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டிகளிலும் மூன்று மகளிர் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளிலும் இந்தியாவை இலங்கை எதிர்த்தாடவுள்ளது.ஜனவரி 19, 21, 23 ஆகிய திகதிகளில் சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டிகளும் ஜனவரி 25, 26, 28ஆம் திகதிகளில் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளும் நடைபெறவுள்ளன.
இலங்கை மகளிர் அணியின் தலைவியாக ஷஷிகலா சிறிவர்தன தொடர்ந்தும் நியமிக்கப்பட்டுள்ளார்.சகலதுறை வீராங்கனையான இவர் 73 மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டிகளில் 69 தடவைகள் துடுப்பெடுத்தாடி 1381 ஓட்டங்களை மொத்தமாக பெற்றுள்ளதுடன் பந்துவீச்சில் 89 விக்கட்களையும் கைப்பற்றியுள்ளார். 30 சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் 27 தடவைகள் துடுப்பெடுத்தாடியுள்ள ஷஷிகலா 369 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். பந்துவீச்சில் 32 விக்கட்களை வீழ்த்தியுள்ளார்.
மகளிர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இலங்கை சார்பாக சதம் குவித்த ஒரே ஒரு வீராங்கனையான சமரி அத்தப்பத்து அணியின் உதவித் தலைவியாக நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் 26 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 782 ஓட்டங்களையும் 26 சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் 24 தடவைகள் துடுப்பெடுத்தாடி 266 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.
இதேவேளை சிரேஷ்ட வீராங்கனைகளான சந்தமாலி தோலவத்தவும் சமனி செனவிரட்னவும் இலங்கை அணியிலிருந்து விலகிக்கொள்வதாக சில தினங்களுக்கு முன்னர் தமக்கு அறிவித்ததாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் தெரிவித்தது.பயிற்சிப் போட்டிக்கு 2013 டிசம்பர் 30ஆம் திகதி வருகை தருமாறு அழைக்கப்பட்ட சந்தமாலி அதனை மறுத்துவிட்டு அணியிலிருந்து விலகிக்கொள்வதாக அறிவித்ததாகவும் இலங்கை கிரிக்கட் நிறுவன ஊடகப் பிரிவு தெரிவித்தது.
இதேவேளை சர்வதேச ஒருநாள் குழாமில் இணைக்கப்பட்டிருந்த சமனி செனவிரட்னவும் தானாக விலகிக்கொண்டதாக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஷஷிகலா, சமரி அத்தப்பத்து ஆகியோருடன் பின்வருவோர் இலங்கை மகளிர் கிரிக்கட் குழாமில் பெயரிடப்பட்டுள்ளனர்.ஏஷானி லொக்குசூரிய, தீபிகா ரசங்கிக்கா, டிலானி மனோதரா, சமரி பொல்கம்பொல, யசோதா மெண்டிஸ், அனூஷ்கா சஞ்சீவனி, மாதுரி சமுதிக்கா, சந்திமா குணரட்ன, உதேஷிக்கா ப்ரபோதினி, ஸ்ரீபாலி வீரக்கொடி, லசன்தி மதுஷானி, ஓஷாதீ ரணசிங்க ஆகியோர் குழாமில் இடம்பெறும் ஏனைய வீராங்கனைகளாவர்.
இவர்களை விட நிலக்ஷி சில்வா, இனோக்கா ரணவீர, சத்துராணி குணவர்தன, ரங்கிக்கா பெர்னாண்டோ ஆகிய நால்வரும் தயார் நிலை வீராங்கனைகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை