இலங்கை அணியில் பாரிய மாற்றங்களுக்கான வாய்ப்பு?
இலங்கை அணி தொடர்ந்தும் சோபிக்க தவறுகின்றமையால் கிரிக்கெட் அணியில் பாரிய மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் எழுந்துள்ளன. அத்தோடு அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க மற்றும் அதிரடி துடுப்பாட்ட வீரரும் பந்து வீச்சாளருமான திஸர பெரேரா ஆகியோரின் இருப்பும் கேள்விக்குறியாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பயிற்றுவிப்பாளர்களிலும் மாற்றங்கள் ஏற்படலாமென்றும் குறித்த ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, லசித் மலிங்கவின் அண்மைக்கால பெறுபேறுகள் மிகவும் மோசமானதாக அமைந்துள்ளன. இதனால் அவர் அணியிலிருந்து நீக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இலங்கை கிரிக்கெட் சபையின் மூத்த அதிகாரிகளுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பையடுத்து புதிய வருடத்தில் அதிகளவிலான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் வைத்து பாகிஸ்தானுக்கெதிராக இலங்கை அணி 2--3 என்ற கணக்கில் ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரைத் தோற்ற பின்பு, முழுமையான திறமைகளை வெளிப்படுத்தாத சிரேஷ்ட வீரர்களைக் கொண்டு போட்டிகளை வெற்றி கொள்ள முடியாது எனத் தெரிவிக்கப்பட்டதாகவும், அதன் காரணமாக லசித் மலிங்க இலங்கை அணியிலிருந்து நீக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
லசித் மலிங்க, திஸர பெரேரா இருவரும் போதுமானளவு அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதில்லை எனவும், லசித் மலிங்கவின் உடற்தகுதி தொடர்பான பிரச்சினைகளும் காணப்படுவதாகவும், அதன் காரணமாக உடற்தகுதிப் பயிற்சிகளிலும் லசித் மலிங்க பங்குபற்றுவதில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இடம்பெற்றுவரும் பிக் பாஷ் லீக் தொடரில் பங்குபற்றுவதற்கான அனுமதியை திஸர பெரேரா கோரியிருந்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டதோடு, இலங்கைக்கு திரும்பவுள்ள அவர் இலங்கை "ஏ" அணி போட்டிகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவர்களைத் தவிர, இலங்கையின் துடுப்பாட்டப் பயிற்றுவிப்பாளர் மாவன் அத்தப்பத்து, களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளர் றுவன் கல்பகே ஆகியோரின் பதவிகளும் ஆபத்திலுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
கருத்துகள் இல்லை