காமத்தால் பெண் என்ஜினீயரை குழந்தைகளுடன் கொன்றேன், கொலையாளி வாக்குமூலம்
கோவை கணபதி ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் மருதமாணிக்கம் (வயது 35). இவர் சங்கனூர் சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக உள்ளார். இவரது மனைவி வத்சலா தேவி (27). சிவில் என்ஜினீயரிங் படித்துள்ளார்.
இவர்களுக்கு மகிலன் (6) மற்றும் 10 மாத குழந்தையான பிரணீத் என்ற 2 மகன்கள் உள்ளனர். மகிலன் 1–ம் வகுப்பு படித்து வந்தார். இவர்களுடன் மருதமாணிக்கத்தின் தாய் கோவிந்தம்மாளும் வசித்து வந்தார்.
நேற்று முன்தினம் மருத மாணிக்கம் வேலை விசயமாக திருப்பூருக்கு சென்றுவிட்டார். மாமியார் கோவிந்தம்மாள் உடையாம்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மாலை 7.30 மணிக்கு வீடு திரும்பினார்.
வீட்டில் மருமகளும், பேரக்குழந்தைகளும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த கோவிந்தம்மாள் அலறித்துடித்தார். இவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் கொலை குறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்ததும் விரைந்து வந்த போலீசார் வத்சலா தேவி மற்றும் 2 குழந்தைகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
கொலையாளி யார்? என கண்டுபிடிக்க கோவை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் ஜோதி மற்றும் சுரேஷ் தலைமையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
விசாரணையில் மருத மாணிக்கத்தின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த வாலிபர் செந்தில் இந்த கொலையை செய்தது உறுதியானது. அவர் தனது சொந்த ஊரான மானாமதுரையில் பதுங்கியிருப்பதை கண்டு பிடித்த போலீசார் அங்கு விரைந்து சென்று செந்திலை கைது செய்தனர்.
பின்னர் கோவை அழைத்து வந்தனர். கோவையில் வைத்து செந்திலிடம் 3 கொலைகள் குறித்து தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது செந்தில் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:–
எனது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள கருங்கபாளையம். நான் எனது பெற்றோருடன் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே கோவை வந்துவிட்டேன். இங்கேயே 10–ம் வகுப்பு வரை படித்த நான் டிரைவர் தொழில் செய்து வந்தேன்.
எனது நண்பர்கள் கணபதி ரங்கநாதர் தெருவில் வசித்து வந்தனர். வத்சலா தேவியின் வீட்டுக்கு அருகில் அவர்களது வீடும் இருந்தது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நண்பர்கள் வீட்டுக்கு சென்றபோது முதல் முறையாக வத்சலா தேவியை பார்த்தேன்.
அவரது அழகில் மயங்கிய எனக்கு அவர் மீது ஆசை ஏற்பட்டது. அவரை எப்படியாவது அடைய வேண்டும் என்று எண்ணினேன். அவரை பார்ப்பதற்காகவே அடிக்கடி நண்பர்கள் வீட்டுக்கு சென்று வந்தேன். அப்போது வத்சலா தேவி வீட்டுக்கு முன்பு நின்று கொண்டு தனது குழந்தைக்கு சோறு ஊட்டிக் கொண்டு இருப்பார். நண்பரிடம் பேசுவது போல் நின்று வத்சலா தேவியை ரசித்து வந்தேன்.
இதற்கிடையில் எனக்கும் லீலாவதி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. அவருடன் குடும்பம் நடத்த ஆரம்பித்தேன். ஆனாலும் எனக்கு வத்சலா தேவியின் மீது இருந்த காமம் குறையவில்லை.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மருதமாணிக்கத்துக்கு சொந்தமான குடியிருப்பில் ஒரு வீடு காலியாக இருப்பதை அறிந்தேன். இதையடுத்து நான் எனது மனைவியுடன் அந்த வீட்டில் குடியேறினேன். எனது மனைவி 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
எனக்கும், லீலாவதிக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்படும். அப்போதெல்லாம் வத்சலா தேவியின் கணவர் மருதமாணிக்கம் தேவையில்லாமல் எனது குடும்ப விவகாரத்தில் தலையிட்டு சமாதானம் செய்து வைப்பார். என்னை கண்டிக்கவும் செய்வார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் எனது மனைவி என்னுடன் கோபித்துக் கொண்டு அவருடைய பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். என் நடத்தை சரியில்லாத காரணத்தால் மருதமாணிக்கம் என்னை வீட்டை காலி செய்யும்படி கூறினார். இதையடுத்து நான் வீட்டை காலி செய்தேன். அப்போது வீட்டு அட்வான்ஸ் ரூ.2500 தொகையை மருதமாணிக்கம் பாக்கி வைத்திருந்தார்.
நான் வீடு காலி செய்த போது வத்சலாதேவி குழந்தைகளுடன் அவரது தாய் வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு மருத மாணிக்கத்திடம் மீதி தொகையை வாங்கலாம் என்று அவரது வீட்டுக்கு சென்றேன். அப்போது வீட்டில் மருதமாணிக்கமும், வத்சலா தேவியும் இருந்தனர்.
அவர்களிடம் மீதி அட்வான்ஸ் தொகை குறித்து கேட்டேன். அப்போது மருத மாணிக்கம் வீடு காலியாக உள்ளது. வீட்டுக்கு ஆட்கள் யாராவது குடி வந்ததும் அவர்களிடம் அட்வான்ஸ் தொகை பெற்று பணத்தை திருப்பி தருவதாக கூறினார்.
அப்போது நான் எனக்கு தெரிந்த சிலர் உள்ளனர். அவர்களுக்கு வீடு தேவைப்படுகிறது. அவர்களை அழைத்து வந்து வீடு காட்டலாமா? என்று கேட்டேன். அவர்களும் அழைத்து வரும் படி கூறினர். அப்போது வத்சலா தேவியும், அவரது கணவர் மருதமாணிக்கமும் என்னுடன் நன்றாக பேசினர். அவர்களுக்கு என் மீது வெறுப்பு இல்லை என தெரிந்து கொண்டேன். இதையடுத்து அங்கிருந்து வெளியேறினேன்.
இந்த நிலையில் மாலை 4 மணிக்கு வத்சலா தேவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட நான், "வீடு பார்க்க ஆட்களை அழைத்து வரட்டுமா?" என கேட்டேன். அதற்கு அவர், "என் கணவர் திருப்பூருக்கு சென்றுவிட்டார். மாமியாரும் வீட்டில் இல்லை. நான் மட்டும் குழந்தைகளுடன் தனியாக உள்ளேன். எனவே இன்று வீட்டுக்கு வர வேண்டாம். மற்றொரு நாள் அழைத்து வாருங்கள்" என்று கூறினார்.
இதன்மூலம் வத்சலா தேவி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்தேன். இன்று எப்படியாவது வத்சலா தேவியை அடைந்து விட வேண்டும் என முடிவு செய்தேன். மதுக்கடைக்கு சென்று மது வாங்கி வந்தேன். வீட்டில் 4.30 மணிக்கு மது அருந்தினேன். பின்னர் மோட்டார் சைக்கிளில் வத்சலா தேவியின் வீட்டுக்கு சென்றேன்.
வீட்டுக்குள் வத்சலா தேவி மட்டும் தனியாக ஹாலில் இருந்தார். அவரது குழந்தை தொட்டிலில் தூங்கி கொண்டு இருந்தது. சின்ன பையன் படுக்கையறையில் இருந்தான். என்னை பார்த்ததும் வத்சலா தேவி என்னிடம், "இன்று தான் வீட்டில் யாரும் இல்லை வரவேண்டாம் என கூறினேனே? ஏன் இன்று வந்தாய்?" என கேட்டார்.
அப்போது நான் அவரை உல்லாசத்துக்கு அழைத்தேன். அவர் என்னை கடுமையான வார்த்தைகளால் திட்டினார். எங்கள் இருவருக்கும் வாக்குவாதம் நடந்தது. திடீரென நான் அவரை கற்பழிக்க முயன்றேன். அவர் என்னை தள்ளிவிட்டுவிட்டு சத்தமிட்டவாறே பாத்ரூமிற்குள் ஓடினார்.
ஆத்திரமடைந்த நான் அவரை உயிருடன் விட்டால் என்னை சிக்க வைத்துவிடுவார் என எண்ணி தயாராக கொண்டு சென்றிருந்த கத்தியால் குத்தினேன். இதில் அவர் கழிவறைக்குள் கீழே விழுந்தார். பின்னர் அவரது கழுத்தை அறுத்தேன். இதில் சம்பவ இடத்திலேயே வத்சலா தேவி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பைப்பில் தண்ணீரை திறந்து விட்டு ரத்தத்தை கழுவி விட்டேன்.
பின்னர் அங்கிருந்து வெளியேற தயாரானேன். கழிவறையில் இருந்து வெளியே வந்தபோது அங்கு வத்சலா தேவியின் முதல் மகன் மகிலன் நின்று கொண்டு இருந்தான். அவன் நடந்த சம்பவங்களை பார்த்துக் கொண்டு இருந்தது அப்போது தான் எனக்கு தெரிந்தது. அவனுக்கு என்னை நன்றாக அடையாளம் தெரியும். அவன் என்னை காட்டிக் கொடுத்துவிடுவான் என பயந்து அவனையும் கொலை செய்ய முயன்றேன். அவன் என்னிடம் இருந்து தப்பித்து படுக்கையறைக்கு ஓடினான். அவனை துரத்தி சென்ற நான் படுக்கையில் அவனை தள்ளி 3 முறை கத்தியால் கொடூரமாக குத்தி கொன்றேன். அப்போது தொட்டிலில் தூங்கி கொண்டிருந்த குழந்தை பிரணீத் எழுந்து பசிக்கு அழ ஆரம்பித்தான்.
குழந்தையின் அழு குரல் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் யாராவது வந்துவிட்டால் சிக்கல் ஆகிவிடும் என நினைத்த நான் 10 மாத குழந்தை பிரணீத்தை தொட்டிலில் வைத்து கத்தியால் குத்தி கொன்றேன். 3 பேரும் இறந்ததை உறுதி செய்த நான் அங்கிருந்து அவசரம் அவசரமாக என் வீட்டுக்கு சென்றேன்.
அங்கு இருந்த என் தாயிடம் நடந்தவற்றை கூறினேன். அவர்கள் என் ஆடையிலிருந்த ரத்த கறை கழுவினர். பின்னர் ஆடை மாற்றிய என்னை அங்கிருந்து தப்பித்து செல்லும்படி கூறினர். மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு மானாமதுரைக்கு சென்றேன். அங்கு பதுங்கியிருந்தபோது போலீசார் என்னை சுற்றி வளைத்து கைது செய்து விட்டனர்.
இவ்வாறு செந்தில் கூறினார்.
செந்தில் கொடுத்த தகவலின் அடிப்படையில் அவன் மறைத்து வைத்திருந்த கத்தியையும், ரத்தக்கறை படிந்த ஆடையையும் போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
குழந்தைகளுடன் பெண் என்ஜினீயர் வத்சலாதேவி கொலை செய்யப்பட்டது குறித்து தனிப்படை போலீசார் விசாரணையில் இறங்கினர். முதலில் வத்சலா தேவியின் கணவர் மருத மாணிக்கம் மற்றும் மாமியார் கோவிந்தமாள் மீது சந்தேகப்பட்டு விசாரித்தனர். ஆனால் அவர்களுக்கு கொலையில் தொடர்பு இல்லாதது தெரியவந்தது.
தொடர்ந்து வத்சலா தேவியின் செல்போனை ஆராய்ந்தனர். அப்போது வத்சலா தேவி கொலை செய்யப்பட்ட அன்று செந்தில் என்பவருடன் கடைசியாக பேசியிருந்தது தெரிய வந்தது. அதனடிப்படையில் விசாரித்தபோது மருத மாணிக்கத்தின் வீட்டில் செந்தில் குடியிருந்ததும், கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் வீட்டை காலி செய்து சென்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து செந்திலின் தொலைபேசிக்கு போலீசார் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அவரது செல்போன் எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசாருக்கு செந்தில் மீது சந்தேகம் வலுத்தது. போலீசார் செந்திலுக்கு வீடு பிடித்து கொடுத்த புரோக்கரை பிடித்து விசாரித்தனர். அப்போது செந்தில் அதே பகுதியில் 2 தெரு தள்ளி பெற்றோர் வீட்டில் குடியிருப்பது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் செந்திலின் பெற்றோர் வீட்டுக்கு சென்றனர். அங்கு செந்தில் இல்லை. அவருடைய தாய் மற்றும் சகோதரரிடம் செந்தில் குறித்து விசாரித்தனர். அப்போது செந்திலின் தாய், "எனது மகன் எங்கு இருக்கிறான்? என தெரியவில்லை. அவன் கொலை எல்லாம் செய்யும் அளவுக்கு கொடூரன் இல்லை" என்று கூறினர். தொடர்ந்து அவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறினர். இதன் காரணமாக போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. இதையடுத்து வீட்டை விட்டு போலீசார் வெளியேறினர்.
அப்போது வீட்டுக்கு முன்பு செந்திலின் அண்ணன் குழந்தைகள் 2 பேர் விளையாடிக் கொண்டிருந்தனர். போலீசார் குழந்தைகள் 2 பேரையும் அழைத்து செந்தில் குறித்து விசாரித்தனர். ஒன்றும் அறியாத அந்த குழந்தைகள் நடந்தவற்றை போலீசாரிடம் புட்டு புட்டு வைத்தனர்.
"சித்தப்பா ரத்தம் சிந்திய ஆடையுடன் வீட்டுக்கு வந்தார். அவரிடம் அப்பா என்ன நடந்தது? என்று கேட்டார். அப்போது இருவரும் என்னமோ பேசினார்கள். பின்னர் அப்பாவும், பாட்டியும் சேர்ந்து சித்தப்பா ஆடையிலிருந்த ரத்தத்தை தண்ணீரில் கழுவி விட்டனர். ஆடை மாற்றிக் கொண்டு சித்தப்பா பைக்கில் ஏறி சென்றுவிட்டார்" என கூறினர்.
இதையடுத்து வத்சலா தேவியை குழந்தைகளுடன் கொலை செய்தது செந்தில் என்பதை போலீசார் உறுதி செய்தனர். மீண்டும் வீட்டுக்குள் சென்ற அவர்கள் செந்திலின் தாயிடம் தங்களது பாணியில் விசாரித்தனர். "குழந்தைகள் உண்மையை கூறிவிட்டனர். ஒழுங்காக நடந்தவற்றை கூறிவிடுங்கள்" என்றனர்.
இதைத்தொடர்ந்து செந்திலின் தாய் நடந்தவற்றை கூறினார். "என் மகன் செந்தில் மாலை 6.30 மணிக்கு ரத்தக்கறை படிந்த ஆடையுடன் வீட்டுக்குள் ஓடி வந்து கதவை சாத்தினான். அவனிடம் என்ன நடந்தது? என்று கேட்டேன். அப்போது வத்சலா தேவியுடன் ஏற்பட்ட தகராறில் அவரை, குழந்தைகளுடன் சேர்த்து கொலை செய்துவிட்டதாக கூறினான்.
அவனிடம் இங்கு நீ இருக்க வேண்டாம். எங்காவது தப்பி சென்றுவிடு என்று கூறினேன். எனவே அவன் ரத்தக்கறை படிந்த ஆடையை மாற்றிவிட்டு பைக்கில் சென்றுவிட்டான்" என்று கூறினார்.
இதையடுத்து செந்திலின் தாயை செல்போனில் செந்திலிடம் போலீசார் பேச வைத்தனர். அந்த செல்போன் உரையாடல் மூலம் செந்தில் மானாமதுரையில் பதுங்கியிருப்பதை போலீசார் அறிந்து அங்கு சென்று செந்திலை கைது செய்தனர்.
கருத்துகள் இல்லை