பெற்ற மகளையே கர்ப்பிணியாக்கிய கூலித்தொழிலாளி கைது
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் அரகல்கோடு அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ராஜய்யா(வயது 48). கூலி தொழிலாளி. இவருடைய மகள் சுவேதா(வயது 15) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 9–ம் வகுப்பு படித்து வருகிறார்.இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சுவேதாவின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டது. மேலும் அடிக்கடி மயக்கமும் ஏற்பட்டது. இதனால் சுவேதாவை அவரது தாய் அரகல்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.
அங்கு சுவேதாவை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் 4 மாத கர்ப்பமாக இருப்பதாக கூறினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய தாய், இதுகுறித்து சுவேதாவிடம் கேட்டார்.அப்போது சுவேதா, ‘கடந்த சில மாதங்களுக்கு முன்பு தந்தை மது குடித்து விட்டு குடிபோதையில் வந்து என்னை கற்பழித்தார். பின்னர் அதுகுறித்து வெளியில் யாரிடமும் கூறினால் உன்னையும், உன் தாயாரையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார். இதனால் அவருக்கு பயந்து நான் யாரிடமும் கூறவில்லை. இதனை பயன்படுத்திக் கொண்ட அவர் என்னை அடிக்கடி மிரட்டி கற்பழித்தார்’ என்று கண்ணீருடன் தெரிவித்தார்.
இதை கேட்டு சுவேதாவின் தாய் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து சுவேதா அரகல்கோடு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் ஹென்னூர் போலீசில் சுவேதாவின் தாயார் புகார் செய்தார்.அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, சுவேதாவின் தந்தை ராஜய்யாவை கைது செய்தனர்.
கருத்துகள் இல்லை