ஆண் கர்ப்பமாக நடிக்கும் ‘கர்ப்பஸ்ரீமான்’ மலையாளப் படம்…!
வித்தியாசமான படங்களையும், கதைகளையும், கதாபாத்திரங்களையும் உருவாக்குவதில் இந்திய அளவில் சிறந்த கலைஞர்களைக் கொண்ட திரையுலகம் மலையாளத் திரையுலகம் மட்டுமே. குறைந்த செலவில் அவர்கள் எடுக்கும் படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.
ஹீரோக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் , கதைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருபவர்கள் மலையாளத் திரையுலகினர். அவர்களது அடுத்த ஒரு வித்தியாசமான படைப்பு ‘கர்ப்பஸ்ரீமான்’. ஒரு ஆண் கர்ப்பமடைவதை இந்த படத்தில் நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறார்களாம்.
பிரபல மலையாள நகைச்சுவை நடிகரான சூரஜ் வெஞ்சாரமூடு இந்த படத்தில் கர்ப்பமான ஆண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை அனில் கோபிநாத் என்பவர் இயக்குகிறார்.
மனோஜ் கே. ஜெயன், ஷம்மி திலகன், நெடுமுடி வேணு மற்றும் பலர் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். கிராமத்துப் பின்னணியில் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். புராணங்களிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு விஷயத்தை முன்மாதிரியாகக் கொண்டு இந்த படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார்களாம்.
அதே சமயம், இந்த படத்தின் திரைக்கதை விவகாரம் தொடர்பாக வழக்கு ஒன்று தொடரப்பட்டு அதற்கு சில நாட்களுக்கு முன்தான் தீர்ப்பு கிடைத்திருக்கிறது. படத்தின் ஒரிஜனல் திரைக்கதை வைத்திருப்பவருக்கு ஐந்து லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கொடுத்து விட்டு , படத்தைத் திரையிட தயாரிப்பாளருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
1994ம் ஆண்டு ஹாலிவுட்டில் ஆர்னால்ட் ஸ்காவேஸ்நேகர் இப்படி கர்ப்பமடைந்த ஆணாக நடித்து ‘ஜுனியர்’ என்ற படம் வெளிவந்தது. இப்படத்தின் தழுவல்தான் ‘கர்ப்பஸ்ரீமான்’ என மல்லுவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.
கருத்துகள் இல்லை