• Breaking News

    தீர்க்கப்படாத மர்மங்கள் 2 - மிர்னி வைரச்சுரங்கம்


    சைபீரிய வனப்பகுதிக்கு நடுவில், மிர்னி என்று அழைக்கப்படும் ஒரு நகரம் உள்ளது. பல மைல்களுக்கு பரந்துள்ள காடுகள் நிறைந்த அந்த நிலப்பரப்பில், சிறியளவிலான மக்களே வாழ்ந்து வருகின்றனர். மிகச்சாதாரண மக்கள் வாழ்ந்து வரும் இந்த நகரம் ஒரேயொரு விடயத்தால் உலகின் கவனத்தைப் பெற்றுள்ளது. அதுதான் மர்மமான மிர்னி வைரச்சுரங்கம்.


    இந்த நகரத்தின் நடுவில் 1,000 அடி ஆழத்திலும் அரை மைல் அகலத்திலும் ஒரு பிரமாண்டமான சுரங்கத் துளை உள்ளது. தற்போது இது செயல்பாட்டில் இல்லாவிடினும், இதுவே உலகத்தின் மிக வெற்றிகரமான வைர சுரங்கமாகும். இதன் மேல் பறக்கும் எதுவாக இருந்தாலும் உறிஞ்சி உள்ளிழுத்துக் கொள்ளும் தன்மை கொண்டது அந்த மர்மத்துளை.



    வைரங்களுக்காக சைபீரியாவை வேட்டையாடிய சோவியத்

    1955 ஆம் ஆண்டில், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, தன்னை மீண்டும் கட்டியெழுப்பிக் கொண்டிருந்தது சோவியத் யூனியன். போர் முடிந்த பின்னர், சோவியத் புவியியலாளர்கள் வைரங்கள் இருக்கக்கூடிய சாத்தியமான இடங்களை தேடிப் புறப்பட்டனர். கிழக்கு சைபீரியாவின் மண்ணை பரிசோதித்தபோது அந்த பகுதியில் வைரங்கள் இருக்கும் சாத்தியக்கூறுகள் தெரிந்தன.

    1957 ஆம் ஆண்டளவில், சோவியத் அதிபர் ஸ்டாலின், மிர்னி வைர சுரங்கத்தைக் கட்ட உத்தரவிட்டார். கட்டுமான பணிகளில் சில சிக்கல்கள் எழுந்தன. முதலாவதாக, சைபீரியாவில் உள்ள தரை ஆண்டுக்கு குறைந்தது ஏழு மாதங்களுக்கு ஒரு தடிமனான பனிப்படிவினால் மூடப்பட்டிருக்கும். அதை உடைப்பது மிகவும் கடினமான காரியம். அது உறைந்துபோகாத மீதி ஐந்து மாதங்களில், அந்த பனிப்படிவு சேறும் சகதியுமாக இருக்கும். அத்தகைய நிலப்பரப்பில் சுரங்க வேலையை தொடர்வது சாத்தியமற்றது.
    மிர்னி வைர சுரங்கம்
    மேலும், குளிர்காலத்தில் இப்பகுதியில் சராசரி வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கு கீழே 40 டிகிரி ஆகும். இக்காலங்களில் வாகன டயர்களில் வெடிப்பு ஏற்படும். வாகன இயந்திர எண்ணெய் (engine oil) உறைந்துவிடும்.
    ஆயினும்கூட, சோவியத் விடாமுயற்சியுடன் இருந்தது. ஏனெனில் அந்த மண்ணில் பாரிய வைரச்சுரங்கம் இருப்பதை மண் மாதிரி ஆய்வுகள் தெரிவித்தன. அதனைக் கைப்பற்றினால் போரினால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை கட்டியெழுப்பலாமென சோவியத் எண்ணியது.

    பனித்தரையை கரைக்க ஜெட் என்ஜின்கள், இயந்திரங்களை உறைந்து போகாமல் இருக்க தடிமனான கவர்கள், மற்றும் உறை பனியை வெடிக்க வைக்க சக்திவாய்ந்த டைனமைட் ஆகியன தயாராகின. இவற்றின் உதவியுடன் பொறியாளர்கள் தரையை உடைத்து சுரங்கத்தை தோண்ட முடிந்தது.

    மிர்னி வைரச்சுரங்கத்தின் கோடிக்கணக்கான மதிப்பு

    1960 ஆம் ஆண்டளவில், வைரச்சுரங்கம் இயக்கத்துக்கு வந்தது. புவியியலாளர்கள் எதிர்பார்த்ததைப் போலவே, சுரங்கத்தின் ஒவ்வொரு துணுக்கும் பாரியளவிலான வைரங்களை வாரிவழங்கியது. 1960 களில், மிர்னி வைர சுரங்கம், ஆண்டுக்கு பத்து மில்லியன் காரட் வைரங்களை உற்பத்தி செய்தது. அவற்றில் 20 சதவீதம் ரத்தின தரமுள்ளவை. 342.57 காரட் ஆடம்பரமான எலுமிச்சை மஞ்சள் வைரம் இந்த சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அக்காலத்தில் உலகின் மிகப்பெரிய வைரமாக அது அறியப்பட்டது. இந்த வைரச்சுரங்கம், அது செயற்படும் காலம் வரையிலும் 13 பில்லியன் டாலர் மதிப்புள்ள வைரங்களை உற்பத்தி செய்தது.

    அது அமைந்திருக்கும் நகரத்தை விட பெரிய மிர்னி வைர சுரங்கம்

    இந்த வைரச்சுரங்கம், அது வெளியிடும் பாரியளவிலான வைரங்களினால் உலகின் கவனத்தைப் பெற்றது. உலகெங்கிலும் உள்ள வைர விநியோகஸ்தர்கள் அதனை சந்தேகிக்கத் தொடங்கினர். உலகின் சிறந்த வைர விநியோகஸ்தரான டி பீர்ஸ் (De Beers) வைரச்சுரங்கத்தின் உற்பத்தி குறித்து ஆராய விரும்பினார்.

    முடிந்தவரை பல வைரங்களை வாங்குவது டி பீர்ஸ்ஸின் வழக்கம். மிர்னி சுரங்கத்தில் உற்பத்தி விகிதங்கள் மிக அதிகமாக இருப்பதால், டி பீர்ஸின் நிறுவனம் அந்தளவு வைரங்களை வாங்க முடியாது என நிறுவன நிர்வாகிகள் நினைத்தனர். மற்ற நிலத்தடி சுரங்கங்களுடன் ஒப்பிடுகையில் மிர்னி சுரங்கம் ஒப்பீட்டளவில் சிறியதாக இருப்பதால், அதன் உற்பத்தி விகிதமும் மிகவும் குறைவாக இருக்க வேண்டும் என்று அந்த நிறுவனம் உணர்ந்தது. ஆனால் அதன் உற்பத்தி விகிதமும் உற்பத்தி செய்யப்படும் வைரங்களின் பெறுமதியும் அசாதாரணமாக இருப்பது எல்லோரையும் வியப்படைய வைத்தது.

    1970 ஆம் ஆண்டில், டி பியர்ஸின் பிரதிநிதிகள், வைரங்களை தயாரிப்பதைக் காண சுரங்கத்திற்கு சுற்றுப்பயணம் செல்லத் திட்டமிட்டனர். அவர்களது கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்க ஆறு ஆண்டுகள் ஆனது. பிரதிநிதிகள் மிர்னிக்கு வந்த பிறகும், அவர்கள் பல இன்னல்லகளைச் சந்தித்தனர். சுரங்கத்தைப் பார்வையிட அவர்களுக்கு வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே அனுபதிக்கப்பட்டது. அவர்கள் எதிர்பார்த்த விபரங்களைப் பெற இந்த குறைவான நேரம் போதுமானதாக இருக்கவில்லை.

    அப்போதிருந்து, மிர்னி வைர சுரங்கம் ஒரு மர்மமாகவே இருந்து வருகிறது. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகும், பல உள்ளூர் நிறுவனங்களால் நிதியளிக்கப்பட்ட சுரங்கம் தொடர்ந்து இயங்கி வந்தது. இதுவரை டி பியர்ஸின் பிரதிநிதிகளைத் தவிர எந்தவொரு வெளியாட்களும் அந்த சுரங்கத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.

    எதிர்பாராத திருப்பம் – மூடப்பட்டது மிர்னி

    2004 ஆம் ஆண்டு, திடீரென வைரச்சுரங்கத்தை மூடுவதாக அதிகாரிகள் அறிவித்தனர். பெருவெள்ளம் காரணமாக சுரங்கம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும், சதிக் கோட்பாட்டாளர்களும் வைர விற்பனையாளர்களும் அதனை நம்பவில்லை.

    செயற்கைக்கோள் புகைப்படத்தில் தெரியும் மிர்னி சுரங்கம்

    இப்போது, மிர்னி வைர சுரங்கத்தின் மிகப்பெரிய திறந்தவெளி துளை கைவிடப்பட்ட நிலையிலுள்ளது. ரஷ்ய நிறுவனமான அல்ரோசாவால், வைரங்கள் குறித்த நிலத்தடி ஆராய்ச்சி இன்றும் தொடர்கிறது. அந்த சுரங்கம், மேலே பறக்கும் ஹெலிகாப்டர்களை உள்ளிழுத்துக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. அதனால் சுரங்கத்தின் மேலே எந்தவொரு விமானமும் பறக்க தடைசெய்யப்பட்டுள்ளது. மேற்பரப்பில் இருந்து வரும் குளிர்ந்த காற்று சுரங்கத்தின் உள்ளிருந்து வரும் சூடான காற்றைச் சந்திக்கும் போது, அது ஹெலிகாப்டர்களையும் சிறிய விமானங்களையும் அதன் ஆழத்திற்குள் உறிஞ்சும் அளவுக்கு சக்திவாய்ந்த ஒரு சுழலை உருவாக்குகிறது.

    ஒரு காலத்தில் உலகின் வைரங்களில் பாதிக்கும் மேற்பட்டவற்றை உற்பத்தி செய்த மிர்னி வைர சுரங்கம், இன்றுவரை ஒரு மர்மமாகவே உள்ளது.

    இந்த சுரங்கத்தைப் பற்றி இன்னும் பல பதிலளிக்கப்படாத பல கேள்விகள் உள்ளன:
    1. மிக வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருந்த சுரங்கம், திடீரென மூடப்பட்டது ஏன்?
    2. இதுவரை வெளியாட்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படாததன் காரணம் என்ன?
    3. இதைவிட பாரிய வைரச் சுரங்கங்களால் உற்பத்தி செய்யமுடியாத அளவு வைரங்களை இந்த சுரங்கம் எவ்வாறு உற்பத்தி செய்தது?

    முன்னைய பகுதிகளை படிக்க

    மர்மங்கள் தொடரும்....

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad