கொரோனா வைரஸ் ஒருபோதும் ஒழியாது - உலக சுகாதார நிறுவனம்
உலக நாடுகள் அனைத்தும், கொரோனா வைரசை முற்றிலுமாக ஒழித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றன. இதையொட்டி வளர்ந்த நாடுகள் தொடங்கி பல நாடுகளும் பெரும் நிதி முதலீட்டில் ஆராய்ச்சிகள் நடத்தி வருகின்றன. இன்னொரு பக்கம் இந்த வைரஸ் தொற்றை தடுப்பதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிப்பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
இந்தநிலையில் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில், உலக சுகாதார நிறுவனத்தின் அவசர பிரிவு இயக்குனர் டாக்டர் மைக் ரேயான் நேற்றுமுன்தினம் நிருபர்களுக்கு
பேட்டி அளித்தார். அப்போது அவர், “கொரோனா வைரஸ், தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்ட பிறகும்கூட ஒருபோதும் ஒழிந்து போகாமல் அப்படியே இருந்து விடக்கூடும்” என எச்சரித்தார்.
குறிப்பாக எப்போது இந்த வைரஸ் மறையும் என்று எதிர்பார்த்து
காத்துக்கிடக்கிற விஞ்ஞானிகளுக்கான
எச்சரிக்கையாக இது அமைந்துள்ளது.
இதையொட்டி அவர் தொடர்ந்து கூறியதாவது:-
கொரோனா வைரஸ் எப்போதுமே நம் சமூகத்தில் இருந்து விடும் ஒரு வைரஸாக மாறி விடக்கூடும். இந்த வைரஸ் ஒரு போதும் ஒழிந்து போகாது. எச்.ஐ.வி. வைரஸைப் பாருங்கள். அது போய் விட வில்லை. ஆனால் அந்த வைரஸ் இருக்கும்போதும், நாம் கட்டுப்பாடுகளுடன் வாழ பழகிக்கொண்டு விட்டோம். எனவே கொரோனா வைரஸ் தொற்று நோய் எப்போதாவது மறைந்து விடும் என்று யாராலும் கணிக்க முடியும் என்று நான் கருதவில்லை.
கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு விட்டாலும்கூட,
அந்த வைரசை தடுக்க பிரமாண்டமான ஒரு முயற்சி தேவைப்படும்.
தற்போது 100-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் முன்னேற்றம் காணப்பட்டு வருகிறது.
தட்டம்மை போன்ற பிற நோய்களை பாருங்கள். அவற்றுக்கு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு வழக்கத்தில் உள்ளன. ஆனாலும் அந்த நோய்கள் இன்னும் முற்றிலுமாய் அகற்றப்பட்டு விடவில்லை.
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக பல நாடுகள் ஊரடங்கு போட்டுள்ளன. அந்த நாடுகள் படிப்படியாக அதை தளர்த்த தொடங்கி உள்ள நிலையில், அவற்றின் தலைவர்களிடம் இருந்து வெளிப்படையாக கருத்துகள் வரத் தொடங்கி உள்ளன.
எப்படி பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவது என்பதில் கவனம் செலுத்துகிறார்கள். ஆனால் இது சிக்கலானது. ஊரடங்கு மிகச்சிறப்பாக
செயலாற்றுகிறது என்று கருதுவதும் சரி, ஊரடங்கை தளர்த்துவது மிகச்சிறந்ததாக இருக்கும் என்று கருதுவதும் சரி, இரண்டுமே ஆபத்தானவைதான். இவ்வாறு அவர் கூறினார்.
உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கருத்து சற்று மாறுபட்டதாக உள்ளது. அவர் கூறும்போது, “கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியம் இன்னும் உள்ளது. அதற்கான பாதை நம் கைகளில் உள்ளது. அதில் எல்லோருக்கும்
பொறுப்பு உள்ளது. நாம் அனைவரும் பங்களிப்பு செய்தால் இந்த தொற்றுநோயை தடுத்து நிறுத்தலாம்” என குறிப்பிட்டார்.
மேலும், “கொரோனா வைரஸின் இரண்டாவது அலைகளை சந்திக்காமல், கட்டுப்பாடுகளை
தளர்த்துவதற்கான உத்தரவாத வழி இல்லை. ஒவ்வொரு நாடும் ஊரடங்கில் இருந்து வெவ்வேறு விதமாக வெளியேற விரும்புகின்றன. ஆனால் எந்த நாட்டிலும் இந்த வைரஸ் உச்சகட்ட அளவுக்கு செல்லக்கூடும்
என்பதால் அனைத்து நாடுகளும் உஷாராக இருக்க வேண்டும் என்பதுதான் எங்கள் பரிந்துரையாக இருக்கிறது” எனவும் அவர் குறிப்பிட்டார்.
உலக சுகாதார நிறுவனத்தின் தொற்றுநோய் வல்லுனர் மரியா வான்கெர்கோவ் கூறுகையில், “நாம் இந்த கொரோனா வைரஸ் தொற்று நோயில் இருந்து வெளியே வருவதற்கு சற்றுகாலம் ஆகும் என்பதை மனதில் பதித்துக் கொள்ள வேண்டும் என்றார்.
கருத்துகள் இல்லை