• Breaking News

    கொரோனாவுக்கு எதிராகப் போராடுங்கள் பழி போடுவதை நிறுத்துங்கள்’ - அமெரிக்காவுக்கு சீனா பதிலடி


    கொரோனா வைரஸ் தொற்று நோயை பொறுத்தமட்டில் சீனாவின் கைப்பாவையாக உலக சுகாதார நிறுவனம் செயல்படுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கி வரும் நிதி உதவியையும் அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. இரண்டு  தினங்களுக்கு முன் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோமுக்கு அமெரிக்க ஜனாதிபதி  ட்ரம்ப் அனல் பறக்கும் கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

    அதில் அவர், உலக சுகாதார நிறுவனம் 30 நாளில் சீனாவிடம் இருந்து விடுபட்டு, சுதந்திரமாக இயங்குவதை நிரூபித்துக்காட்ட வேண்டும், அப்படி செய்யாவிட்டால், அந்த நிறுவனத்துக்கு வழங்கும் நிதியை நிரந்தரமாக நிறுத்தி விடுவோம், உலக சுகாதார நிறுவனத்தின் உறுப்பினராகவும் தொடர மாட்டோம் என கெடு விதித்துள்ளார். இது சர்வதேச அரங்கில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில், சீன தலைநகர் பீஜிங்கில், அந்த நாட்டின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், உலக சுகாதார நிறுவனத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி  ட்ரம்ப் எழுதியுள்ள கடிதம் பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளித்து கூறியதாவது:-

    உலக சுகாதார நிறுவன தலைவருக்கு அமெரிக்க ஜனாதிபதி எழுதியுள்ள கடிதம் தெளிவற்ற வெளிப்பாடுகளால் நிரம்பி உள்ளது. சீனா மீது அவதூறு பரப்ப மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தவதில் திறமையற்று செயல்பட்டுக்கொண்டு, சீனா மீது பழிபோட முயற்சிக்கிறது.

    கொரோனா வைரஸ் தொற்று இப்போது அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இன்னும் பரவி வருகிறது. எனவே அமெரிக்க அரசியல்வாதிகள் பழிபோடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். கொரோனா வைரஸ் பரவலை தடுத்து நிறுத்த சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும்.உலக சுகாதார நிறுவனத்துக்கான உறுப்பு நாடுகள் நிதி பங்களிப்பை உறுப்பு நாடுகள் கூட்டாக செய்கின்றன. இது அமெரிக்காவால் மட்டும் தீர்மானித்து விட முடியாது. உலக சுகாதார நிறுவனத்துக்கு உரிய பங்களிப்புகளை சரியான நேரத்தில் செலுத்துவது என்பது உறுப்பு நாடுகளின் கடமை ஆகும். இதை வைத்து பேரம் பேசக்கூடாது. அப்படிப்பட்ட சூழலில், உலக சுகாதார நிறுவனத்துக்கான நிதியை நிறுத்துவேன் என்று ஒருதலைப்பட்சமாக அமெரிக்கா அச்சுறுத்துவது என்பது கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில் அதன் சர்வதேசக்கடமையை அமெரிக்கா மீறுவது ஆகும் என்றார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad