• Breaking News

    சில விநோதமான தற்செயல் நிகழ்வுகள்


    எமது வாழ்க்கை பல தற்செயல் நிகழ்வுகளால் நிறைந்துள்ளது. பல நிகழ்வுகளை நாம் சாதாரணமாக கடந்துவிடுவோம். ஆனால் எப்போதாவது அசாதாரணமான சில நிகழ்வுகள் நம்மை ஆச்சரியப்படுத்தும். இது மிகவும் நம்பமுடியாத, நம்பமுடியாத தற்செயல் நிகழ்வுகளின் சிலவற்றின் தொகுப்பாகும்.

    1. குழந்தை பருவத்து புத்தகம்



    இந்த சம்பவம் நடந்தது 1920 களில். அமெரிக்க நாவலாசிரியர் அன்னா பாரிஷ் (Anne Parrish) அவரது கணவருடன் பாரிஸிற்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கே புத்தகக்கடைகளில் உலாவிக் கொண்டிருந்தபோது, அவர் தனது குழந்தை பருவத்தில் படித்த புத்தகங்களில் ஒன்றான  ”ஜாக் ஃப்ரோஸ்ட் மற்றும் பிற கதைகள்” (Jack Frost and Other Stories) எனும் புத்தகத்தைக் கண்டார். அந்த பழைய புத்தகத்தை எடுத்து கணவனுக்குக் காட்டி, அது சிறுவயதில் தனக்கு மிகவும் பிடித்தமான புத்தகமெனவும் தனது குழந்தைப்பருவத்தை நினைவு படுத்துவதாகவும் சொன்னார். அவரது கணவர் புத்தகத்தை எடுத்து, அதைத் திறந்தபோது அதன் புதல் பக்கத்தில் இவ்வாறு எழுதியிருந்தது -  “அன்னா பாரிஷ், 209 என். வெபர் ஸ்ட்ரீட், கொலராடோ ஸ்பிரிங்ஸ்.” ஆம் அது அன்னாவின் சொந்தப் புத்தகம். அமெரிக்காவிலிருந்து சென்ற அன்னாவை அவரது சிறுவயது புத்தகம் பரிஸில் மீண்டும் கிடைத்தது. 

    2. போக்கர் (Poker) அதிர்ஷ்டம்


    1858 ஆம் ஆண்டில், ராபர்ட் ஃபாலன் (Robert Fallon) என்பவர் அவர் வழமையாக போக்கர் விளையாடிக்கொண்டிருந்த போது உடன் விளையாடுபவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஃபாலன், மோசடி மூலம் $600 டொலர்களை வென்றதாக எண்ணி அதற்கு பழிவாங்கவே அவரை சுட்டனர். அந்த சம்பவத்தின் பின்னரும் விளையாட்டு  தொடர்ந்து கொண்டிருந்தது. இப்போது போக்கர்  விளையாடுவதற்கு ஃபாலோனின் இருக்கை காலியாக இருந்தாலும் கொலை நடந்த உடனேயே அவரது இடத்தில் தொடர்ந்தும்  விளையாட அவ்விடத்திலிருந்த யாரும் தயாராக இல்லை.

    ஆட்டத்தை தொடர விருப்பிய மற்றவர்கள், ஃபாலோனின் இடத்துக்கு ஒரு புதியவரைக் கண்டுபிடித்து, அந்த $600 களுடன் ஆட்டத்தை தொடரும்படி கேட்டனர். கொலை குறித்து விசாரிக்க காவல்துறையினர் வருவதற்கிடையில், புதிய நபர் 600 டாலர்களை $ 2,200 ஆக மாற்றியுள்ளார். ஃபாலோன் வென்ற $ 600 ஐ அவருக்குரிய அடுத்த உறவினருக்கு அனுப்ப காவல்துறை கோரியது. அப்போது விளையாட்டில் இணைந்த புதியவர்தான் ஃபாலோனின் மகன் எனவும் அவர் தனது தந்தையை 7 வருடங்களாக சந்திக்கவில்லை எனவும் தெரியவந்தது. 

    3. இரட்டை மரணங்கள்



    2002 ஆம் ஆண்டு, வடபின்லாந்தில் ஒரே சாலையில் 70 வயது இரட்டை சகோதரர்கள் தனித்தனி விபத்துக்களில், சில மணிநேர இடைவெளியில் இறந்தனர். தலைநகர் ஹெல்சின்கிக்கு (Helsinki) வடக்கே 600 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரஹேவில் (Raahe) தனது பைக்கில் சவாரி செய்யும் போது லாரியில் மோதி இரட்டையர்களில் மூத்தவர் இறந்தார். அவரது சகோதரர் அவர் கொல்லப்பட்ட இடத்திலிருந்து 1.5 கி.மீ தூரத்தில் ஒரு விபத்தை சந்தித்து உயிரிழந்தார். "இது ஒரு வரலாற்று தற்செயல் நிகழ்வு. சாலை எப்போதும் பரபரப்பாக இருந்தாலும், ஒவ்வொரு நாளும் விபத்துக்கள் ஏற்படாது ”என்று போலீஸ் அதிகாரி மர்ஜா-லீனா ஹுஹ்தாலா (Marja-Leena Huhtala) செய்தியாளர்களிடம் தெரிவித்தார். "இருவரும் சகோதரர்கள், மற்றும் ஒரே மாதிரியான இரட்டையர்கள் (identical twins) என்று கேள்விப்பட்டபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இது மிக அபூர்வமான நிகழ்வு” என்று அவர் கூறினார்.


    4. ஆலன் போவின் (Allan Poe) கதை நிஜமான நிகழ்வு



    19 ஆம் நூற்றாண்டில், பிரபல திகில் எழுத்தாளர் எக்தார் ஆலன் போ (Egdar Allan Poe), ‘ஆர்தர் கார்டன் பிம்மின் கதை (The narrative of Arthur Gordon Pym) என்ற புத்தகத்தை எழுதினார். அந்தக் கதை, ஒரு கப்பல் விபத்தில் தப்பிய நான்கு பேர் ரிச்சர்ட் பார்க்கர் (Richard Parker) என்று அழைக்கப்படும் கேபின் சிறுவனைக் கொன்று சாப்பிட்டு தாம் உயிர்வாழ, முடிவு செய்வதைப் பற்றியது. இக்கதை வெளிவந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு, 1884 ஆம் ஆண்டில், ஒரு படகு விபத்தில் தப்பிப்பிழைத்த மூன்று பேர் பல நாட்கள் கழித்து மீட்கப்பட்டனர். அந்தக் குழுவின் மூன்று மூத்த உறுப்பினர்கள், கேபின் சிறுவனைக் கொன்று சாப்பிட்டதை அறிந்த போலீஸார் அதிர்ந்தனர். அந்த கேபின் பையனின் பெயர் ரிச்சர்ட் பார்க்கர் (Richard Parker).

    5. அரசரும் உணவக உரிமையாளரும்

    இத்தாலியின் மோன்சாவில், அரசர் உம்பர்ட்டோ I (King Umberto I), இரவு உணவிற்காக ஒரு சிறிய உணவகத்திற்குச் சென்றார். அவருடன் அவரது உதவியாளர் ஜெனரல் எமிலியோ பொன்சியா- வாக்லியாவும் (General Emilio Ponzia- Vaglia) சென்றிருந்தார். உணவக உரிமையாளர் அரசரின் ஆர்டரை எடுத்தபோது, அவரும் உரிமையாளரும் மெய்நிகர் இரட்டையர் (virtual doubles) போல முகம் மற்றும் உருவமைப்பில் இருப்பதை அரசர் கவனித்தார்.

    இருவருமே ஒருவருக்கொருவர் இடையிலான ஒற்றுமையைப் பற்றி விவாதிக்கத் தொடங்கினர். அதன் மூலம், மேலும் பல ஒற்றுமைகளைக் கண்டறிந்தனர்.

    1. இரண்டு பேரும் ஒரே நாளில், ஒரே ஆண்டில், (மார்ச் 14, 1844) பிறந்தவர்கள்
    2. இருவரும் ஒரே ஊரில் பிறந்தவர்கள்.
    3. இருவருமே மார்கெரிட்டா (Margherita) என்ற ஒரே பெயரில் ஒரு பெண்ணை மணந்தார்கள்.
    4. அரசர் இத்தாலியின் மன்னராக முடிசூட்டப்பட்ட அதே நாளில் உணவகக்காரர் தனது உணவகத்தைத் திறந்தார்.
    5. ஜூலை 29, 1900 அன்று, உணவகக்காரர் ஒரு மர்மமான துப்பாக்கிச் சூட்டில் விபத்துக்குள்ளானதாக அரசருக்கு அறிவிக்கப்பட்டது, மேலும் அவர் தனது வருத்தத்தைத் தெரிவித்தபோது, கூட்டத்தில் இருந்த ஒரு அராஜகவாதியால் அவர் படுகொலை செய்யப்பட்டார்.


    6. ஜோசப் ஃபிக்லாக்கும் குழந்தையும்


    1930 களில் டெட்ராய்டில் (Detroit), ஜோசப் ஃபிக்லாக் (Joseph Figlock) என்ற நபர் ஒரு இளம் தாயின் வாழ்க்கையில் ஒரு முக்கிய நபராக மாறினார். ஃபிக்லாக் தெருவில் நடந்து கொண்டிருந்தபோது, ஒரு குழந்தை உயரமான ஜன்னலிலிருந்து ஃபிக்லாக் மீது விழுந்தது. அதிஷ்டவசமாக, ஃபிக்லாக்கிற்கோ குழந்தைக்கோ எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஒரு வருடம் கழித்து, அதே குழந்தை ஜன்னலில் இருந்து மீண்டும் விழுந்தது. அதே நேரம் ஃபிக்லாக் அதே வழியாக வந்துகொண்டிருந்தார். குழந்தையும் முன்போலவே அவர் மீதுதான் விழுந்தது. இம்முறையும் இருவரும் நிகழ்வில் இருந்து தப்பினர்.

    7. மர்மத் துறவி


    19 ஆம் நூற்றாண்டில் ஆஸ்திரியாவில் (Austria), ஜோசப் அய்னர் (Joseph Aigner) என்ற புகழ்பெற்ற ஓவியர் பல சந்தர்ப்பங்களில் தற்கொலைக்கு முயன்றார். அவரது 18 வயதில் தூக்குப்போட்டு தற்கொலை செய்ய மேற்கொண்ட முதல் முயற்சியின் போது, ஒரு மர்மமான கபுச்சின் (Capuchin) துறவி குறுக்கிட்டு அவரது முயற்சியைத் தோற்கடித்தார். மீண்டும் 22 வயதில், அதே துறவி அய்னரை தூக்கிட்டு தற்கொலை செய்வதிலிருந்து தடுத்தார். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அய்னரின் அரசியல் நடவடிக்கைகளுக்காக அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் மீண்டும், அதே துறவியின் தலையீட்டால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டது. இறுதியாக , 68 வயதில், ஜோசப் அய்னர் ஒரு துப்பாக்கியைப் பயன்படுத்தி தன்னைத்தானே சுட்டுக் கொண்டார். அவரது இறுதி சடங்கு அதே கபுச்சின் துறவியால் நடத்தப்பட்டது என்பதில் ஆச்சரியமில்லை, ஆனால் அய்னருக்கு அந்தத் துறவியின் பெயர் கூட இறுதிவரை தெரிந்திருக்கவில்லை. 

    8. அதிசய புகைப்படம்




    இந்நிகழ்வு 1914 இல் நடந்தது. தனது குழந்தையை புகைப்படம் எடுத்த ஒரு ஜெர்மன் தாய், ஸ்ட்ராஸ்பேர்க்கில் (Strasbourg) உள்ள ஒரு கடையில் படத்தை பிரிண்ட் செய்ய கொடுத்திருந்தார். அந்த நாட்களில் படத்தகடுகள் தனித்தனியாக விற்கப்பட்டுக்கொண்டிருந்தன. முதலாம் உலகப் போர் வெடித்திருந்த அந்த நேரத்தில் ஸ்ட்ராஸ்பேர்க்கிற்கு சென்று படத்தை எடுக்க அந்தப் பெண்ணால் முடியவில்லை. அதே பெண், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, புதிதாகப் பிறந்த தனது மகளின் புகைப்படத்தை எடுக்க, 100 மைல்களுக்கு அப்பால் உள்ள பிராங்பேர்ட்டில்(Frankfurt) ஒரு திரைப்படத் தகடு வாங்கினார். அந்தப்படத்தை பிரிண்ட் செய்தபோது, இருவருடங்களுக்கு முன் எடுத்த மகனின் படத்தின் மேல் மகளது படம் அச்சிடப்பட்டிருந்ததைக் கண்டு ஆச்சரியமடைந்தார். முதலில் பிரிண்ட் போட கொடுத்த திரைப்படத் தகடு புதியது என்று நினைத்து தவறுதலாக அதே பெண்ணுக்கே மறுவிற்பனை செய்யப்பட்டது பிறகு தெரியவந்தது.  

    9. தொலைந்த புத்தகம் 


    1973 ஆம் ஆண்டில், நடிகர் அந்தோனி ஹாப்கின்ஸ் (Anthony Hopkins), “தி கேர்ள் ஃப்ரம் பெட்ரோவ்கா” (The Girl From Petrovka ) என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இந்தப் படத்தின் திரைக்கதை ஜார்ஜ் ஃபீஃபர் (George Feifer) என்ற நாவலாசிரியர் எழுதிய ஒரு நாவலை அடிப்படையாகக் கொண்டது. அந்தப் புத்தகத்தின் நகலைக் லண்டனில் எங்கும் தேடுயும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒருநாள் ஏதொவொரு அலுவலாக ரயில் நிலையம் சென்ற ஹாப்கின்ஸ் அந்தப் புத்தக நகலை அங்கிருந்த ஒரு பெஞ்சில் இருந்து கண்டெடுத்தார். பின்பு, நடிகர் கண்டெடுத்தது அந்த எழுத்தாளரின் பிரத்தியேக புத்தக நகல் எனவும் எழுத்தாளர் அதை தன் நண்பருக்கு படிக்க இரவல் கொடுத்தபோது, நண்பரின் காரிலிரிந்து அது திருடப்பட்டது என்பதும் தெரியவந்தது.

    10. அதிசய இரட்டையர்கள்


    இரட்டை சகோதரர்களான ஜிம் லூயிஸ் (Jim Lewis) மற்றும் ஜிம் ஸ்பிரிங்கர் (Jim Springer) பிறக்கும்போதே வெவ்வேறு குடும்பங்களால் தத்தெடுக்கப்பட்டு குழந்தைப் பருவத்திலேயே பிரிந்துவிட்டனர். தத்தெடுத்த இரு குடும்பங்களும் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள். இரு குடும்பங்களும் சிறுவர்களுக்கு ஜேம்ஸ் என்று பெயரிட்டு வெவ்வேறு இடங்களில் அவர்களை வளர்த்து வந்தனர். சகோதரர்கள் இருவரும் ஒருவரை தெரியாமலே வளர்ந்து வந்தனர். ஆனால் இருவரும் சட்ட அமலாக்கப் பயிற்சியை தெஇர்ய் செய்து படித்தனர். இருவரும் இயந்திர வரைதலிலும் தச்சுத் தொழிலிலுல் திறமையை வெளிப்படுத்தி வந்தனர். அதைவிட அதிசயமாக இருவரும் லிண்டா என்ற பெயரைக் கொண்ட பெண்களையே மணந்தனர். இருவருக்கும் மகன்கள் இருந்தனர், தமது மகன்களுக்கு  சகோதரர்கள் இருவருமே ஜேம்ஸ் ஆலன் (James Alan) என்ற பெயரையே சூட்டினர். சில காலங்களின் பின், இரு சகோதரர்களும் தத்தமது மனைவியரை விவாகரத்து செய்து மறுமணம் புரிந்தனர். இருவரினதும் புது மனைவிகளின் பெயரும் பெட்டி (Betty). இருவரும் வளர்த்து வந்த நாய்களுக்கும் ஒரே பெயரையே (டாய் – Toy) சூட்டியிருந்தனர். இது அனைத்தும் அவர்கள் ஒருவரை ஒருவர் அறியாமல் தற்செயலாக நடந்த விடயங்களாகும். 

    11. பழிவாங்கும் கொலை


    1883 ஆம் ஆண்டில், ஹென்றி ஜீக்லேண்ட் (Henry Ziegland) என்பவர் சில கருத்து வேறுபாடுகளால் தனது காதலியுடனான உறவை முறித்துக் கொண்டார்.  மனஉளைச்சல் அடந்த காதலி தற்கொலை செய்து கொண்டார். சகோதரியின் மரணத்துக்கு ஜீக்லேண்ட்தான் காரணமென எண்ணிய காதலியின் சகோதரன் ஜீக்லேண்டை கொலைசெய்யும் நோக்கத்துடன் துப்பாக்கியால் சுட்டார். ஆனால், உண்மையில், ஜீக்லேண்ட் கொல்லப்படவில்லை, வெறும் காயங்களுடன் தப்பித்துக்கொண்டார். இதை அறியாத காதலியின் சகோதரன், கொலை செய்த குற்றவுணர்ச்சியால் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். ஜீக்லேண்ட்டை தாக்கிய புல்லட் அவரது முகத்தை தேய்த்துக்கொண்டு அருகிலிருந்த ஒரு மரத்தில் புதைந்திருந்தது. பல வருடங்கள் கழித்து, ஜீக்லேண்ட் அதே மரத்தை வெட்ட முடிவு செய்தார். அதில் தன்னை முன்பு தாக்கிய புல்லட்  இன்னும் இருந்தது ஜீக்லேண்ட்டுக்கு தெரிந்திருக்கவில்லை.  அந்த மரம் பிரம்மாண்டமானதாகவும் மிகவும் வலிமையானதாகவும் தோன்றியது. அதனால்அதை டைனமைட் மூலம் வெடிக்க வைக்க முடிவு செய்தார். டைனமைட் வெடித்ததால் வெளியேறிய புல்லட் ஜீக்லாண்டின் தலையில் பட்டு அவரைக் கொன்றது. பல வருடங்களின் பின் அதே புல்லட் காத்திருந்து உயிரைப் பறித்தது அபூர்வமான ஒரு தற்செயல்தான்.




    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad