நிழல் உலக தாதா முத்தப்பா ராய் மரணம்...
இந்தியத்
தாதாக்களில் மிக முக்கியமானவர்களில் ஒருவரான முத்தப்பா ராய் [வயது68] மரணமானார். பெங்களூரு: பெங்களூருவை அதிர வைத்த கடைசி நிழல்
உலக தாதாவான முத்தப்பா ராய் புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார். இந்தியாவின் வர்த்தக
தலைநகரான மும்பை பெருநகரத்தையே தாவூத் இப்ராஹிம், சோட்டா ராஜன் போன்ற நிழல் உலக தாதாக்கள்
ஆட்டிப் படைத்து வந்தனர். அதே காலத்தில் இந்தியாவின் தொழில்நுட்ப தலைநகரான பெங்களூருவை
கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்தான் தாதா முத்தப்பா ராய். 1990களில்
இருந்து மரணிக்கும் வரை முத்தப்பா ராய் ஒரு நிழல் உலக தாதாவாகத்தான் இயங்கினார். ஆனால் ஒவ்வொரு
கால கட்டத்திலும் ஒவ்வொரு முகத்தை மாற்றி கொண்டார்
தாதா வாழ்க்கையில்
தொடக்க காலங்களில் கொலை, கட்டப் பஞ்சாயத்து, ஆட்கடத்தல் என அத்தனை ஆட்டங்களையும் போட்டவர்
முத்தப்பா ராய். தாவூத் இப்ராஹிம் கோஷ்டிக்கே தலைவலியாக இருந்தவர். 1990களின் தொடக்கத்தில்
உச்சத்தில் இருந்த முத்தப்பா ராய்க்கும் எதிரிகள் ஸ்கெட்ச் போட்டனர். ஒரு துப்பாக்கிச்
சூட்டுச் சம்பவத்தில் குண்டு காயங்களுடன் உயிர் தப்பினார் முத்தப்பா ராய். மரண பயத்தை
கண்ணில் காட்டிட்டாங்கடா பரமா என்பதைப் போல அதிர்ந்து போன முத்தப்பா ராய் துபாயில்
குடியேறினார். அதுவும் நான் திருந்திவிட்டேன் என்கிற அறிவிப்புடன்.
ஆட்டம்
ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்குமா என்ன? நிழல் உலக வாழ்க்கையில் தொழிலதிபர்
என்கிற முகத்துடன் அடுத்த ஆட்டத்தை முத்தப்பா ராய் ஆடிவந்தார். அப்போது
முத்தப்பா ராய்தான் சர்வதேச கேங்குகளின் ராஜாவாக கொடிகட்டிப் பறந்தார். ஆனால் விதி
வலியது அல்லவா கொலை வழக்குகளில் முத்தப்பா
ராய் துபாயில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டார். தம் மீதான வழக்குகளை
துவம்சம் செய்து 2000-ம் ஆண்டுகளின் இறுதியில் இன்னொரு அவதாரம் எடுத்தார் முத்தப்பா
ராய். ஆம் ஜெய கர்நாடகா என்ற கன்னடர் நலனுக்கான இயக்கமாக தொடங்கினார். பிறகு என்ன?
முத்தப்பா ராயின் ஆட்டம் அரசியல் வடிவத்திலும் தொடர்ந்தது. ரவி புஜாரி வழக்கு ஊரை அடித்து
உலையில் போட்ட முத்தப்பா ராய், ஒருகட்டத்தில் ஊழலை ஒழிக்க ஆயுதம் ஏந்துங்கள் என்றெல்லாம்
முழங்கிப் பார்த்தார். ஆனால் வாட்டாள் நாகராஜ்களையே மண்ணை கவ்வ வைத்த கன்னடர்கள் முத்தப்பா
ராயை அரசியலில் பத்தோடு பதினொன்றாகத்தான் வைத்திருந்தனர். கடந்த மாதம் கூட நிழல் உலக
தாதா ரவிபுஜாரி தொடர்பான வழக்கில் பிடதியில் வைத்து முத்தப்பா ராயிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது முத்தப்பா ராய் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில் சிகிச்சை
பலனின்றி முத்தப்பா ராய் காலமானார். இவரது சொந்த ஊர் தென் கனரா மாவட்டம், புத்தூர்.
அவரது ஒரு மனைவி ரேகா ராய், 2013ம் ஆண்டு, இறந்துவிட்டார். 2018ம் ஆண்டு அனுராதா என்பவரை
இரண்டாவது தாரமாக மணமுடித்தார். முத்தப்பா ராயின் சாம்ராஜ்யத்தை அவரது இரு மகன்கள்தான்
ஆண்டு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை