• Breaking News

    ஜார்ஜ் பிளாய்ட் கொலையால் அமெரிக்காவில் போராட்டம் தீவிரம்; 25 நகரங்களில் ஊரடங்கு


    அமெரிக்காவில் ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்னர் கறுப்பு இன மக்கள், வெள்ளை இன  பொலிஸாரால் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக உள்ளது. இந்த நிலையில் அங்குள்ள மின்னசோட்டா மாகாணத்தின் தலைநகரான மினியாபொலிஸ் நகரத்தில் கறுப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46)  என்பவர் பொலிஸ் அதிகாரிகளின் பிடியில் கொல்லப்பட்டார்.

    இது தொடர்பாக வெளியான வீடியோவில், கார் டயருக்கு அடியில் அவர் சிக்கி இருந்ததும், அவரது கழுத்தில் ஒரு பொலிஸ் அதிகாரி தனது முழங்காலால் நெரித்ததும், அவர் மூச்சு விட முடியவில்லை என கதறியதும் காட்சிகளாகி இருந்தன. அவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் தங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று கறுப்பு இன மக்கள் ஆவேச போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.


    இந்த சம்பவத்தில் தொடர்புடைய நான்கு  பொலிஸ் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டாலும், ஜார்ஜ் பிளாய்ட்டின் கழுத்தினை தனது முழங்காலைக்கொண்டு நெரித்த பொலிஸ் அதிகாரி மட்டும் கைது செய்யப்பட்டு அவர் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ஆனால் தொடர்புடைய  நான்கு  பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்து கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட வேண்டும் என்பது கறுப்பு இன மக்களின் கோரிக்கையாக அமைந்துள்ளது.

    கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு அமுலில் இருந்து வருகிற பொது முடக்கத்தையும் கறுப்பர் இன மக்கள் பொருட்படுத்தாமல் வீதிகளுக்கு வந்து போராடுகிறார்கள். மினியாபொலிஸ் நகரில் தொடங்கிய போராட்டம், இப்போது நாடு முழுவதும் பரவி வருகிறது.  பொலிஸ் வாகனங்கள், கட்டிடங்களுக்கு தீ வைக்கப்படுகின்றன. கொள்ளை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

    நேற்று அதிகாலை வரை நீடித்த போராட்டங்களையும், அவற்றில் வெடித்த வன்முறையையும் தொடர்ந்து 16 மாகாணங்களில் உள்ள 25 நகரங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நகரங்களில் மினியாபொலிஸ், செயின்ட் பால், பேவர்லி ஹில்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ், டென்வர், மியாமி, அட்லாண்டா, சிகாகோ, லூயிஸ்வில்லே, ரோகெஸ்டர், சின்சினாட்டி, கிளவ்லாந்து, கொலம்பஸ், டேடன், டொலிடோ, சியாட்டில், நேஷ்வில்லே, சால்ட்லேக் சிட்டி, கொலம்பியா, சார்லஸ்டன், பிட்ஸ்பர்க், பிலடெல்பியா உள்ளிட்டவை அடங்கும்.



    சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்காவின் முக்கிய நகரங்கள் பல கலவரத்திற்கு இலக்காகியுள்ளன.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad