• Breaking News

    சிரியா பிரதமர் திடீர் நீக்கம் - ஜனாதிபதி பஷார் அல் ஆசாத் அதிரடி

    சிரியாவில் 2011-ம் ஆண்டு முதல் ஜனாதிபதி பஷார் அல் ஆசாத் படைகளுக்குக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இதில் இதுவரை 3.80 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.


      அந்த நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நாணய மதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. நாணய மதிப்பு குறைவால் விலைவாசிகள் உயர்ந்து வருவது மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகிறது. இன்னொரு பக்கம் ஊழலும் பெருகி வருகிறது.
      

    இந்த நிலையில் அந்த நாட்டின் பிரதமர் இமாத் காமிசை நேற்று முன்தினம் அதிரடியாக நீக்கி ஜனாதிபதி  பஷார் அல் ஆசாத் நடவடிக்கை எடுத்துள்ளார். 2016-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வரும் அவரை நீக்கியது ஏன் என்பது குறித்து வெளிப்படையாக எந்தவொரு காரணமும் தெரிவிக்கப்படவில்லை.

    சிரியாவின் புதிய பிரதமராக உசேன் ஆர்னஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அந்த நாட்டின் நீர்வளத்துறை மந்திரியாக பதவி வகித்து வந்தவர் ஆவார். 67 வயதான இவர் அரசில் பல்வேறு முக்கிய பதவிகள் வகித்துள்ளார். ஈராக் எல்லையில் உள்ள டெயிர் ஆஸ் ஜோர் மாகாண கவர்னராகவும் இருந்து இருக்கிறார்.

    மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளுக்கு மத்தியில், சிரியாவின் பொருளாதார சரிவை புதிய பிரதமர் தூக்கி நிறுத்துவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad