இந்திய சக்கரத்தை அசைத்துப்பார்த்த சீன ட்ரகன்
உலகின் பதற்றம் அதிகம் உள்ள எல்லைகளில் இந்திய-சீன எல்லையும் ஒன்று. சீன இராணுவம் எல்லை மீறுவதும் இந்தியா பதிலுக்கு இராணுவத்தை அங்கு குவிப்பதும் பின்னர் இரு தரப்பினரும் பின் வாங்குவதும் வழக்கமான ஒன்று. சீன எல்லையில் பதற்றம் இருந்தாலும் 45 வருடங்களாக உயிரிழப்பு இல்லை. பாகிஸ்தானின் எல்லை நேர்மாறானது. அங்கு மரணமும் காயமும் எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். 1975 ஆம் ஆண்டு இந்திய- சீன எல்லையில் நடந்த மோதலில் நான்கு இந்திய வீரர்கள் மாரணமானார்கள். அத பின்னர் இப்போது 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.
கிழக்கு
லடாக் கால்வான் பள்ளத்தாக்கு, பாங்காங் ஏரி, டெம்சே, தவுலத் பெக் ஓல்டி எல்லைகளில்
கடந்த ஏழு வாரங்களாக பதற்றம் நிலவியது. மே மாதம் ஆரம்பமான பதற்றம் ஜூன் மாதம் உயிரிழப்புடன்
தொடர்கிறது. மே மாதம் 5 ஆம் திகதி இந்திய எல்லைக்குள் சீன இராணுவம் அத்து மீறி நுழைந்ததாக இந்தியா குற்றம் சாட்டியது. மே மாதத்தில்
மட்டும் சுமார் ஆறு தடவை சீன இராணுவம் அத்துமீறியதாக இந்தியா தெரிவித்தது. இந்திய
-சீன எல்லையில் இரு நாடுகளும் படைகளைக் குவித்தன. இதற்கிடையில் பேச்சு வார்த்தை மூலம்
பிரச்சனையைத் தீர்ப்பதற்கான முயற்சியும் முன்னெடுக்கப்பட்டது.
இந்திய - சீன எல்லை 3,488 கி.மீற்றர் நீளமானது. பிரிட்டிஷ் காலத்தில் இருந்தே எல்லை சரியாக நிர்ணயம் செய்யப்படவில்லை. இரண்டு நாட்டின் இல்லையில் இராணுவமும் ரோந்து செல்லும் பகுதியே எல்லை என கருதப்படுகிறது. இந்தியாவுக்குச் சொந்தமான லடாக்கின் அக்சாய் சின் எனும் இடத்தை சீனா ஆக்கிரமித்து சொந்தம் கொண்டாடுகிறது. ஜின் ஜியாங் மாகாணத்தின் ஒரு பகுதி அக்சா சின் என்கிறது சீனா. மக்கள் வசிப்பதற்கு தகுதி அற்ற, புல்,பூண்டு கூட முளைக்காத பகுதிக்காக உலகின் இரண்டு வல்லரசுகள் முட்டிமோதுகின்றன.
பனிபடர்ந்த
இமயமலையில் எல்லையே லடாக். சுமார் 14 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் லடாக்கின் கோடைகாலத்திலும்
பனி உறைந்திருக்கும். கோடை காலத்தில் நடுங்கும் குளிரில் இரண்டு நாட்டு இராணுவ வீரர்களும்
காவல் காக்கின்றனர். கடந்த மே மாதம் லடாக்கிலிந்ருது சிக்கிம் வரையான எல்லையில் சீன
இராணுவம் ஊடுருவியது. சில இடங்களில் கூடாரம் அமைக்க முயற்சி செய்தனர். இந்திய இராணுவ
வீரர்கள் அதனைத் தடுத்தனர். மே மாதத்தில் இருந்து ஐந்து முறை பேச்சு வார்த்தை நடைபெற்றது.
ஜுன் 6 ஆம் திகதி நடைபெற்ற பேச்சு வார்த்தையில் எல்லைக்கோட்டை ஒட்டி ஒரு கிலோ மீற்றர்
பரப்பை ஆள் நடமாட்டம் அற்றபகுதியாக அறிவிக்கப்பட்டது. அதன் காரணமாக இரு நாட்டு வீரர்களும் மோதும் சந்தர்ப்பம்
தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கல்வான் பள்ளத்தாக்கு, பாங்கோங் ஏரி ஆகிய பகுதிகளில் இருந்து சீன இராணுவம் பின் வாங்கவில்லை. இச்சம்பவம் நடப்பதற்கு முன், ஷ்யோக், கல்வான் நதிக்கரையில் உள்ள ஜாப் லடாக் பகுதியில் உள்ள ஓய் சந்திப்பில், சீன - இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் அளவில் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
இந்திய எல்லைக்குள் சீன இராணுவம் அமைத்திருந்த அறிவிப்பு பலகையை நீக்க இந்திய இராணுவம் கோரியுள்ளது. இதனையடுத்து 16 பிஹாரி ரெஜிமென்ட் படையின் சிறிய குழு, அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு சென்று சீன இராணுவத்திடம், அதனை அகற்றும் படி வலியுறுத்தியுள்ளனர். இதற்கு சீன இராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. பின் இந்திய வீரர்கள் அங்கிருந்து திரும்பி உள்ளனர்.
இந்திய இ ராணுவத்தின் 50 வீரர்களும், '16 பிஹாரி ரெஜிமென்ட் படை'யின் 50 வீரர்களும் சீன இ ராணுவ வீரர்கள் இருக்கும் இடத்திற்கு மீண்டும் சென்றனர். வெறும் 10 - 15 சீன வீரர்கள் மட்டுமே இருந்த இடத்தில், அச்சமயம் சுமார் 300 பேர் குவிந்துள்ளனர். தொடர்ந்து இந்திய எல்லைக்குள் இருந்து வெளியேறும்படி, சீன இராணுவத்திற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், வாக்குவாதம் முற்றியுள்ளது. தொடர்ந்து இந்திய வீரர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற துவங்கியுள்ளனர். முன்னதாகவே தாக்குதலுக்கு திட்டமிட்ட சீன வீரர்கள், தயாராக வைத்திருந்த இரும்பு ராடு, கற்கள் உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.
அவர்களின்
முதல் தாக்குதல், '16 பிஹாரி
ரெஜிமென்ட்' கமாண்டிங் அதிகாரி மீது தான் நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து
ஆத்திரமடைந்த இந்திய வீரர்கள், பதில்
தாக்குதல் நடத்தினர் இரண்டு மைல் தூரத்தில்
உள்ள இந்திய முகாமுக்கு கைகலப்பு பற்றிய தகவல் அனுப்பப்பட்டதும் மேலதிக வீரகள் அப்பகுதிக்கு
விரைந்தனர்..இரவு 7.30 மணிக்கு ஆரம்பமான கைகலப்பு எட்டு மணித்தியாலம் நீடித்தது.
கைகளாலும் கற்களாலும் இந்திய வீரர்கள் தாக்குதல் நடத்தினர். மரப் பலகை, மரக் கட்டை ஆகியவற்றில் அடிக்கப்பட்ட ஆணி முள்ளுக்கம்பி என்பனவற்றால் சீன வீரர்கள் இந்திய வீரர்களத் தாக்கினர். சீன வீரர்கள் திட்டமிட்டு தாக்குதலுக்குத் தயாராக இருந்ததால் இந்திய வீரர்களின் இழப்பு அதிகமானது. இந்திய வீரர்களின் பதில் தாக்குதலால் சீன வீரர்கள் காயமடைந்திருக்கலாம், அல்லது மரணமாகியிருக்கலாம் சீனா வெளிப்படையாக எதனையும் அறிவிக்கவில்லை. குறுகலான மலை விளிம்பில் கைகலப்பு ஏற்பட்டதால் தடுமாறிய பலர் கல்வான் நதியில் வீழ்ந்தனர். பனி உருகி ஓடும் நதி என்பதால் அதில் விழுந்தவர்கள் இறந்துவிட்டனர்.
கல்வான்
பள்ளத்தாக்கில் நள்ளிரவு வரை நடந்த கைகலப்பில் 20 இராணுவ வீரர்கள் வீர மரணமானதாக இந்தியா
அறிவித்தது. தனது நாட்டு இராணுவ வீரர்களின் சேதம் பற்றிய விபரத்தை சீனா வெளியிடவில்லை.
45 சீன வீரர்கள் மரணமானதாக அமெரிக்க புலனாய்வு ஏஜென்சி அறிவித்தது. அதனை சீனா மறுத்தது.
கல்வான் பள்ளத்தாக்கை ஒட்டிய மலை முகட்டில் இருந்து பார்த்தால் சியாச்சின் வரையிலான
எல்லைப்பகுதியை எளிதாகக் கன்காணிக்க முடியும். இதன் காரணமாக இந்தப் பகுதியில் சீனா
கண் வைத்துள்ளது.
இந்திய
எல்லைக்குள் சீனா அடிக்கடி ஊடுருவுகிறது. அப்பொது இந்தியா பகிரங்கமாக அறிவிக்கிறது.
சீன எல்லைக்குள் இந்தியா ஊடுருவதாக சீனா குற்றம் சுமத்துவதில்லை. இந்திய - சீன எல்லையில்
உள்ள வீரர்கள் துப்பாக்கி, வெடிமருந்து, ஆயுதம் என்பனவற்றைக் கொண்டு செல்லக்கூடாது
என்ற ஒப்பந்தம் உள்ளது. அதன் காரணமாக இரண்டு
நாட்டு வீரர்களும் கற்கால வீரர்கள் போல கைகலப்புச் செய்தனர்.
கல்வான் பள்ளத்தாக்கை ஒட்டிய மலை முகட்டில் இருந்து பார்த்தால் சியாச்சின் வரையிலான இந்தியப்பகுதியை எளிதாகக் கண்காணிக்க முடியும். இதன் காரணமாக அந்தப் பகுதியில் சீனா கண்வைத்துள்ளது. 1962 ஆம் ஆண்டில் நடந்த இந்திய - சீன யுத்தம் இங்குதான் ஆரம்பமானது. தனது எல்லைப் பகுதியில் சீனா புதிய கட்டுமானங்களையும் வசதியான சாலைகளையும் அமைத்துள்ளது. தர்புக் என்ற இடத்தில் இருந்து தவுலத் பெக் விமான இறங்குதளம் வரையிலான 224 கிலோ மீற்றர் தூரத்துக்கு இந்தியா சாலை அமைக்கிறது. இதனைத் தடுப்பதும் சீனாவின் நோக்கங்களில் ஒன்று. எல்லைப் பகுதியில் வசதி அதிகமானால் இந்தியாவின் கை ஓங்கிவிடும் என சீனா கருதுகிறது.
2015
ஆம் ஆண்டு எல்லை தாண்டி கூடாரம் அமைத்த சீனா தானாகவே திரும்பிச்சென்றது. 2017 ஆம் ஆண்டு
டோக்லாம் பகுதியில் அது மீறிய சீனா சாலை அமைக்க முயற்சித்தது. இந்தியாவும் அப்பகுதியில்
தனது படையைக் குவித்தது. அப்போது பிரிக்ஸ் மாநாடு நடைபெற இருந்ததால் சீனா பின் வாங்கியது.
இப்போது கொரோனா அச்சத்தில் உலக நாடுகள் ஆழ்ந்திருக்கையில் சீனா எல்லைதாண்டியுள்ளது.
இந்திய
-சீன மோதலை உகல நாடுகள் விரும்பவில்லை. எல்லை தாண்டி இந்தியச் சக்கரத்தை அசைத்துப்பார்த்த
ட்ரகன் அமைதியாகிவிட்டது. இந்த அமைதி நிரந்தரமானது அல்ல. அது விழிக்கும்போது இன்னொரு
உரசல் உருவாகும்.
கருத்துகள் இல்லை