கரோனாவுக்கு எதிரான போரில் துருக்கி தோற்றுவிட்டது ஜனாதிபதி எர்டோகன்
கரோனாவுக்கு எதிரான போரில் துருக்கி சில இடங்களில் தோற்றுவிட்டது. எனினும் அடுத்து வரும் மாதங்களில் மீண்டு வருவோம் என்று அந்நாட்டு ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து துருக்கி ஜனாதிபதி எர்டோகன் கூறும்போது, “சமீபத்தில் வந்துள்ள கரோனா தொற்று எண்ணிக்கையைப் பார்க்கும்போது நாம் கரோனாவுக்கு எதிரான போரில் தோற்றுவிட்டோம் என்பதைக் காட்டுகிறது. ஆனால், வரும் மாதங்களில் சமூக இடைவெளியைப் பின்பற்றி கரோனாவை நமது நாட்டிலிருந்து விலக்குவோம். மக்களைப் பாதுகாத்து வருடத்தின் இரண்டாம் பகுதியில் பொருளாதாரத்தை மீட்டெடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து மார்ச் மாதத்தில் பல நாடுகள் அதன் எல்லைகளை மூடின. நாடுகளுக்கு இடையேயான விமானச் சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கரோனா தொற்று தொடர்ந்து நீடித்து வந்தாலும், பொருளாதாரச் சூழலைக் கருத்தில்கொண்டு பல நாடுகள் அதன் எல்லைகளைத் திறந்து வருகின்றன. அந்த வகையில் துருக்கி ஜூன் மாதத்தில் விமானச் சேவை உள்ளிட்டவற்றுக்கு அனுமதி அளித்தது.
துருக்கியில் கரோனா தொற்றைத் தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. எனினும் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று துருக்கியில் கணிசமான அளவு அதிகரித்து வருகிறது.
பொது இடங்களில் சமூக இடைவெளியை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வருகிறது. துருக்கியில் இதுவரை 1,85,245 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,905 பேர் பலியாகி உள்ளனர்.
கருத்துகள் இல்லை