நாங்கள் பழிவாங்க எண்ணவில்லை: நிறவெறிக்கு எதிராக பிராவோ
நாங்கள் பழிவாங்க எண்ணவில்லை. சமத்துவத்தையும், மதிப்பையும் கேட்கிறோம் என்று பிராவோ தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 25-ம் திகதி ஜார்ஜ் ஃபிளாய்ட் (46) என்ற கறுப்பினத்தைச் சேர்ந்தவரை போலீஸார் சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்தனர். அப்போது, டெர்ரக் சவுவின் (44) என்ற பொலிஸ் அதிகாரி, ஃபிளாய்டைக் கீழே தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்துப் பலமாக அழுத்தினார். இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஃபிளாய்ட் பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து அமெரிக்கத் தலைநகர் விஷிங்டன் உட்பட பல மாகாணங்களில் போராட்டம் வெடித்தது. இனவாதத்துக்கு எதிராகவும், நிறவாதத்துக்கு எதிராகவும் உலகின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டன
மேற்கிந்திய கிறிக்கெற் வீரர் சமி ஐபிஎல் போட்டியின்போது எதிர்கொண்ட நிறவெறித் தாக்குதலைப் பொதுவெளியில் பகிர்ந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து கிறிஸ் கெயில் போன்ற சக நாட்டு வீரர்கள் சமிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர்.
இந்த நிலையில் மேற்கத்தியத் தீவுகள் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்
அணியின் வீரருமான
பிராவோ உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கும் நிறவெறிப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிராவோ கூறும்போது, “உலகத்தில் நடந்து கொண்டிருப்பது வருத்தத்தை ஏற்படுத்துகிறது. கறுப்பினத்தைச் சேர்ந்தவனாக வரலாற்றில் கறுப்பின மக்கள் கடந்தவற்றை நான் நன்கு அறிவேன். நாங்கள் பழிவாங்க எண்ணவில்லை. நாங்கள் சமத்துவத்தையும், மதிப்பையும் கேட்கிறோம். அவ்வளவுதான். நாங்கள் பிறருக்கு மரியாதை அளிக்கிறோம். இதற்கு மேலும் பொறுக்க முடியாது” என்றார்.
கருத்துகள் இல்லை