• Breaking News

    பிரிட்டிஷ் பிரதமர் ஜான்சனுக்கு நெருக்கடி



    கொரோனா கிருமித்தொற்று நெருக்கடியை பிரிட்டிஷ் அரசாங்கம் கையாண்டதில் வரிசையாக பல குளறுபடிகள் இருந்ததாக பிரிட்டனின் முன்னணி விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

    தினமும் நேரடியாக ஒளிபரப்பாகி வரும் செய்தியாளர் கூட்டத்தில் பிரிட்டனின் தலைமை மருத்துவ அதிகாரி கிரிஸ் விட்டி, கிருமித்தொற்று தொடர்பிலான முடிவுகளில் குறைபாடுகள் இருந்ததைப் பட்டியலிட்டதுடன் அவற்றை மறுஆய்வு செய்யுமாறு கூறியதால் பிரதமர் போரிஸ் ஜான்சன் நெருக்கடிக்கு ஆளானார். நேற்று முன்தினம் ஒளிபரப்பான செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் பக்கத்தில் நின்றவாறு தொற்றுநோய் நிபுணரான திரு விட்டி, இவ்வாறு தெரிவித்தார்.

    கிருமித்தொற்று தொடர்பில் பிரிட்டனின் தாமதமான செயல் பாடுகளே தமக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தைத் தந்துள்ளதாகவும் அவர் கூறினார். “ஏதேனும் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், நோய் பரவத் தொடங்கிய ஆரம்ப நாட்களிலேயே நாம் கிருமிக்கான சோதனைகளைத் துரிதப்படுத்தி இருக்கலாம்,” என்றார். பேராசிரியர் நீல் ஃபெர்குசன் என்ற மற்றொரு பிரிட்டிஷ் மருத்துவ நிபுணரும் இதேபோன்ற கருத்துகளை வெளியிட்டிருந்தார்.

    கிருமிப் பரவலின் ஆரம்பக் கட்டத்திலேயே அது எவ்வாறு விஸ் வரூபம் எடுக்கும் என்பதை முன்னுரைத்தவர் இவர். பிரிட்டன் முன்னரே கிருமித் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் காட்டியிருந்தால் இறந்தோரின் எண்ணிக்கை பாதியாகத்தான் இருந்திருக்கும் என்று அவர் கூறினார்.
    இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு இடையே சிக்கிய   ஜான்சன், எந்த ஒரு தீர்மானத்திற்கும் தற்போது வந்துவிட முடியாது என்றார்.

    கிருமி நெருக்கடியை வேறு விதமாகக் கையாண்டிருப்பீர்களா என்று கேட்கப்பட்டபோது, “நம் செயல்பாடுகள் குறித்து முடிவெடுக்க இன்னும் காலம் வரவில்லை,” என்றார்.

    பிரிட்டனில் 41,000க்கும் மேற்பட்டோர், கொரோனா கிருமி பாதிப்பால் உயிரிழந்துவிட்டனர்.
    அமெரிக்காவுக்கு அடுத்த நிலையில் பிரிட்டன் ஆக அதிகமான உயிரிழப்புகளைக் கொண்டுள்ளது.
    கொவிட்-19 தொடர்பிலான பிரிட்டிஷ் அரசாங்கத்தின் செயல்பாடுகள் பலவாறு விமர்சிக்கப்பட்டு வருகின்றன.

    கிருமித்தொற்று தொடர்பில் விஞ்ஞானிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதால் குழப்பநிலையும் ஏற்பட்டுள்ளது.

    ஐரோப்பிய நாடுகள் தங்களின் எல்லைகளைத் திறக்கத் தொடங்கியுள்ள நிலையில், பிரிட்டன் இன்னமும் முடக்க நிலையில் உள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad