ஷாஹித் அப்ரிடிக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிறிக்கெற் அணியின் முன்னாள் தலைவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து ட்விட்டரில் கடும் உடல் வலியுடன் இருப்பதாக அவர் கூறி உள்ளார். வியாழன் முதல் உடல்நலம் குன்றி இருப்பதாகவும் கூறி இருக்கிறார். முன்னணி கிரிக்கெட் வீரர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் கிரிக்கெட் உலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.
லாக்டவுன், கொரோனா வைரஸ் தொற்று குறித்த அச்சத்தால் தொழில்கள் முடங்கிய நிலையில், பாகிஸ்தானில் அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, தேவையான பொருட்கள், முகக் கவசம் ஆகியவற்றை வழங்கி வந்தார் ஷாஹித் அப்ரிடி.
இது பற்றி வெளியிட்டுள்ள ட்வீட்டில், கடந்த வியாழன் முதல் நான் உடல்நலம் குன்றி இருக்கிறேன். என் உடல் மிக மோசமாக வலிக்கிறது. நான் பரிசோதனை செய்து கொண்டேன். துரதிர்ஷ்டவசமாக கொரோனா வைரஸ் பாஸிடிவ். வேகமாக உடல்நலம் தேற வேண்டும் என பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என கூறி உள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகும் மூன்றாவது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி ஆவார். முன்னதாக முன்னாள் வீரர்கள் தௌபீக் உமர் மற்றும் சபார் சர்பராஸ் ஆகியோர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகினர்.
இவர்கள் மூவர் தவிர தென்னாப்பிரிக்க உள்ளூர் கிரிக்கெட் வீரர் சோலோ நிக்வேனி மற்றும் ஸ்காட்லாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மஜித் ஹக் ஆகியோரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. இவர்களில் அப்ரிடி அனைத்து கிரிக்கெட் ஆடும் நாடுகளிலும் பிரபலமான வீரர்.
கருத்துகள் இல்லை