ஏசி' காருக்குள் முக கவசம் அவசியமா
நாம் கொரோனாவுடன் வாழ பழகிக்
கொண்டிருக்கிறோம். அதில் முக்கியமானது பொதுஇடங்களில் முக கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை
கடைபிடித்தும் செல்ல வேண்டும் என்பதே. ஆனால் காருக்குள் பயணம் செய்யும் போது முககவசம்
அவசியமா என்ற கேள்வி எழுகிறது.இது குறித்து மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது:
நாம் தும்மும் போதும் இருமும்
போதும் பிறரை தொற்றாமல் இருக்கவும் பிறரிடம் இருந்து நமக்கு தொற்றாமல் இருக்கவும் முக
கவசம் அணிகிறோம்.முக கவசம் அணிவதால் நாம் வெளியேற்றும் மூச்சுக்காற்றை மீண்டும் சுவாசிக்கிறோம்;
அதனால் ஆபத்து என்றெல்லாம் பரப்பபடுகிறது. அது தவறு. கொரோனா காலத்திற்கு முன்பே அறுவை
சிகிச்சை செய்யும் டாக்டர்கள் 12 மணி நேரம் தொடர்ச்சியாக முககவசம் அணிகின்றனர். அவர்களுக்கு
பாதிப்பு இல்லை.காரில் செல்லும் போது முக கவசம் அணிய வேண்டுமா என்றால் வேண்டும் வேண்டாம்
என பதில் உண்டு. அது நிபந்தனைகளுக்குட்பட்டது.
1. நீங்கள் ஒருவர் மட்டும்
'ஏசி' காரை ஓட்டி செல்கிறீர்கள் என்றால் அணிய வேண்டாம். வழியில் காரை நிறுத்தி யாரிடமாவது
பேசுவதாக இருந்தால் முக கவசம் அணிந்த பிறகே பேச வேண்டும். எனவே காரில் ஒரு முககவசத்தை
தயாராக வைத்திருக்கவும்.
2. நீங்கள் கார் ஓட்டிக்கொண்டு
குடும்பத்தோடு சமூக இடைவெளியுடன் 'ஏசி' காரில் பயணம் செய்யும் போது முக கவசம் தேவை
இல்லை. வீட்டில் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே காரில் இருப்பதால் தேவை இல்லை.
3. காரில் செல்லும் உங்கள்
குடும்பத்தில் ஒருவருக்கு சளிஇ இருமல் தொந்தரவுகள் இருந்தால் அனைவரும் முககவசம் அணிய
வேண்டும்.
4.செல்லும் வழியில் இன்னொருவரையும்
காரில் ஏற்றிச்செல்வீர்கள் என்றால் அனைவரும் முககவசம் அணிய வேண்டும்.
5. காரை டிரைவர் ஓட்டுவதாக
இருந்தால் அவர் இன்னொரு இடத்தில் இருந்து வந்திருப்பதால் அனைவரும் அணிய வேண்டும்.
6. காரில் 'ஏசி'பயன்படுத்தாமல்
கண்ணாடியை இறக்கி விட்டு செல்வது இப்போதைக்கு நல்லது. காற்றோட்டம் கிடைக்கும். அப்படிச்
சென்றால் அவசியம் முககவசம் அணிய வேண்டும். ஏனெனில் உங்கள் வாகனத்திற்கு அருகில் செல்பவர்கள்
சிந்தும் நீர்த்திவலைகள் காற்றில் பட்டு உங்களை தாக்க கூடும்.
கருத்துகள் இல்லை