பதிலடி மிகவும் மோசமாக இருக்கும் வடகொரியாவுக்கு தென்கொரியா எச்சரிக்கை
வடகொரிய எல்லையில் இரு நாட்டுக்கு பொதுவான அலுவலகத்தை கிம் ஜாங் அரசு சொல்லி வைத்து தகர்த்த நிலையில், தென் கொரியா ராணுவ டாங்கிகளை எல்லையில் குவித்துள்ளது.
கொரோனா பரவலை அடுத்து பராமரிப்பின்றி காணப்பட்ட இரு நாட்டுக்கும் இடையேயான தொடர்பு அலுவலகத்தை வடகொரியா வெடிவைத்து தகர்த்துள்ளது.
சமீப நாட்களாக வடகொரியா தென் கொரியாவை கடுமையாக மிரட்டி வந்ததுடன், இரு நாட்டுக்கும் பொதுவாக 2018 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தொடர்பு அலுவலகத்தை தகர்க்க இருப்பதாகவும் மிரட்டியது.மேலும், தென் கொரியாவுடன் இனி எந்த உறவும் இல்லை எனவும், எதிரி நாடாகவே பார்க்கப்படும் எனவும் கிம் ஜாங் பகிரங்கமாக அறிவித்திருந்தார். இதனிடையே, தென் கொரியா எல்லை மீறிச் செல்வதாகவும், தங்கள் ராணுவத்திடம் நடவடிக்கை எடுக்கும் பொறுப்பை அளித்துள்ளதாகவும் கிம் ஜாங் சகோதரி இரண்டு தினங்களுக்கு முன்னர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையிலேயே எல்லையில் அமைந்துள்ள அலுவலகம் தகர்க்கப்பட்டுள்ளது. இதை வடகொரிய அதிகாரிகள் தரப்பும் உறுதி செய்துள்ளது.குறித்த சம்பவத்திற்கு பின்னரே தென் கொரியா தங்கள் எல்லையில் ராணுவ டாங்கிகளை குவித்துள்ளன.
மட்டுமின்றி எல்லையில் ரோந்து நடவடிக்கைகளையும் அதிகப்படுத்தியுள்ளது தென் கொரியா.அலுவலகம் தகர்க்கப்பட்ட பின்னர் தென் கொரிய அரசாங்கம் ஜனாதிபதி மாளிகையான ப்ளூ ஹவுஸ் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டத்தை நடத்தியது.இனி மேலும் பிராந்தியத்தின் அமைதியை சீர்குலைக்கும் வகையில் வடகொரியா நடந்துகொண்டால், தங்களின் பதிலடி மிகவும் மோசமாக இருக்கும் என அதிகாரிகள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கருத்துகள் இல்லை