டிஸ்னி நிறுவனத்தின் பங்குதாரர் ஆன ஜார்ஜ் ஃப்ளாய்டின் மகள்
அமெரிக்காவில் பொலிஸாரின் அராஜகத்தால் உயிரிழந்த ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணம், சர்வதேச அளவில் இனவெறிக்கு எதிரான போராட்டத்தை உயிர்கொள்ள வைத்துள்ளது.
அமெரிக்காவிலும்,
பிரிட்டனிலும்
கறுப்பின மக்களை அடிமையாக நடத்திய பலரின் சிலைகள் போராட்டக்காரர்களால் இடிக்கப்பட்டுள்ளன. இப்போராட்டமெல்லாம் இனவெறிக்கு மேலும் மேலும் ஜார்ஜ் ஃப்ளாய்டுகள் பலியாகிவிடக் கூடாது என்பதற்காகவே. ஆனால், ஃப்ளாய்டை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்துக்கு என்ன பதில்? அவரது ஐந்து குழந்தைகள் வருங்காலத்தை எப்படி எதிர்கொள்வார்கள்? இந்தக் கேள்விகளுக்கு மனிதமே பதில் என்று நிரூபித்திருக்கிறார்கள் இனவெறிக்கு எதிரான பிரபலங்களும், சாமானியர்களும்.
ஃப்ளாய்டின் குழந்தைகளுக்குச் சர்வதேச அளவில் உதவிக் கரம் நீண்டுள்ளது. அவரது பேரப் பிள்ளைகளின் படிப்புக்கு முழு உதவித்தொகை அளிக்க ‘ஆல்பா கப்பா ஆல்பா’ (Alpha Kappa Alpha) என்ற அமைப்பு முன்வந்துள்ளது.
இந்நிலையில்,
ஃப்ளாய்டின்
6 வயது மகளான ஜியானாவின் பெயரில் டிஸ்னி நிறுவனத்தின் பங்குகளை வாங்கிப் பரிசளித்திருக்கிறார் அமெரிக்காவின் பிரபலப் பாடகியான பார்பரா
ஸ்ட்ரெயிசண்ட். அத்துடன், தான் சிறுவயதில் நடித்த ‘மை நேம் இஸ் பார்பரா’, ‘கலர் மி பார்பரா’ ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் காணொலிப் பதிப்புகளையும் ஜியானாவுக்குப் பரிசாக வழங்கியிருக்கிறார்.
தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிஸ்னி நிறுவனப் பங்குக்கான சான்றிதழுடன் பார்பராவுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஜியானா. எத்தனை பங்குகள் ஜியானாவின் பேரில் வாங்கப்பட்டுள்ளன என்பது பற்றித் தெரிவிக்கப்படவில்லை. இன்றைய தேதியில் டிஸ்னி நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு 118.44 அமெரிக்க டொலர்.r.
2010-ம் ஆண்டு வாங்கப்பட்ட டிஸ்னி நிறுவனத்தின் பங்கின் மதிப்பு தற்போது 370 சதவீதமாக அதிகரித்துள்ளது. எனவே, ஜியானா வளர்ந்து தன்னுடைய வாழ்க்கையை எதிர்கொள்ளும்போது அவரிடம் இருக்கும் டிஸ்னியின் பங்குகள் அவர் வாழ்க்கைக்கு வளம் சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. தொலைநோக்குப் பார்வையுடன் செயலாற்றியுள்ள பார்பராவுக்கு உலகம் முழுக்கப் பாராட்டுகள் குவிந்துகொண்டிருக்கின்றன.
கருத்துகள் இல்லை