இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: மேற்கு இந்தியா முன்னிலை
இங்கிலாந்து - மேற்கு இந்திய அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நடந்து வருகிறது. முதல் நாளில் பலத்த மழை காரணமாக 17.4 ஓவர்கள் மட்டுமே பந்து வீசப்பட்டன. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 2-வது நாள் தேனீர் இடைவேளைக்கு முன்பாக முதல் இன்னிங்சில் 204 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய மேற்கு இந்திய அணி 2-வது நாள் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 57 ரன்கள் எடுத்திருந்தது. கிரேக் பிராத்வெய்ட் 20 ஓட்டங்களுடனும், ஷாய் ஹோப் 3 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.
இரண்டாம் நாளில், நடுவர்களான இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சர்ட் கெட்டில்போரப், ரிச்சர்ட் இல்லிங்வொர்த் ஆகியோரின் செயல்பாடு விமர்சனத்திற்கு உள்ளானது. அவர்களது ஐந்து எல்.பி.டபிள்யூ. கணிப்பு தவறாக அமைந்ததும், டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தை பயன்படுத்தியதால் அத்தகைய தவறுகள் சரிசெய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்பால் டெஸ்ட் போட்டியில் உள்ளூர் நடுவர்களை தற்காலிகமாக பயன்படுத்த ஐ.சி.சி. அனுமதி அளித்திருக்கிறது. ஆனால் இந்த டெஸ்டில் இங்கிலாந்து நடுவர்கள் உள்ளூர் அணிக்கு சாதகமாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த சலசலப்புக்கு மத்தியில் 3-வது நாளான நேற்று மேற்கு இந்திய வீரர்கள் தொடர்ந்து துடுப்பெடுத்தாடினர். இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சு தாக்குதலை மேற்கு இந்திய வீரர்கள் நிதானமாக எதிர்கொண்டு சமாளித்தனர். ஸ்கோர் 102 ரன்களாக உயர்ந்த போது ஷாய் ஹோப் (16ஓட்டங்கள்) டாம் பெஸ்சின் சுழலில் சிக்கினார்.
மறுமுனையில் நேர்த்தியாக விளையாடி அரைசதத்தை கடந்த பிராத்வெய்ட், பென் ஸ்டோக்சின் ஒரே ஒவரில் 3 பவுண்டரிகள் அடித்ததோடு அதே ஓவரில் 65 ஓட்டங்களில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார்.
ஷமார் புரூக்ஸ் 39 ஓட்டங்களிலும், ஜெர்மைன் பிளாக்வுட் 12 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதைத் தொடர்ந்து 6-வது விக்கெட்டுக்கு கைகோர்த்த சகலதுற வீரர் ரோஸ்டன் சேசும், விக்கெட் கீப்பர் ஷேன் டாவ்ரிச்சும் அணியை சரிவில் இருந்து மீட்டதுடன் முன்னிலையும் பெற வைத்தனர். மேற்கு இந்திய அணி 267 ஓட்டங்களை எட்டிய போது இந்த கூட்டணியை ஆண்டர்சன் உடைத்தார். ரோஸ்டன் சேஸ் 47 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். டாவ்ரிச் 61 ஓட்டங்களும், கப்டன் ஜாசன் ஹோல்டர் (5 ஓட்டங்களும் எடுத்தனர்.
மேற்கு இந்திய அணி முதல் இன்னிங்சில் 102 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 318 ஓட்டங்கள் எடுத்தது.
இங்கிலாந்து தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்களும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்களும், டாம் பெஸ் 2 விக்கெட்களும் எடுத்தனர்.
அடுத்து 114 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சை ஆடியது. 10 ஓவர்கள் விளையாடிய இங்கிலாந்து விக்கெட்
இழப்பின்றி 15 ஓட்டங்கள் எடுத்தது.
கருத்துகள் இல்லை