வடகொரியாவில் பாடசாலைகள் திறப்பு: உலக சுகாதார அமைப்பு தகவல்
கொரோனா பாதிப்புகளுக்கிடையே வடகொரியாவில் பள்ளிகள் அனைத்தும் உரிய பாதுகாப்புகளுடன் திறக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பிற்கான வடகொரியாவின் பிரதிநிதி எட்வின் சால்வடோர் கூறும்போது, “ வடகொரியாவில் பாடசாலைகள் அனைத்தும் உரிய பாதுகாப்புகளுடன் திறக்கப்பட்டுள்ளன. எனினும் பொது இடங்களில் மக்கள் கூடுவதற்கு வடகொரிய அரசு தடை விதித்துள்ளது. தொடர்ந்து கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையை வடகொரிய அரசு எடுத்து வருகிறது” என்று தெரிவித்தார்.
ஆனால், இதுகுறித்து வடகொரியா தரப்பில் அதிகாரபூர்வ தகவல் ஏதும் வெளிவரவில்லை.
கரோனாவுக்கு எதிரான நடவடிக்கை குறித்த தகவலை வாரந்தோறும் உலக சுகாதார அமைப்பிற்கு வடகொரியா பகிர்ந்துகொள்ளும். அதன் அடிப்படையில் இந்தத் தகவல் பகிரப்பட்டுள்ளது.
வடகொரியாவில் எவ்வளவு பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.
உலக நாடுகள் கொரோனாவால் பாதிப்புக்குள்ளாகி இருந்த சூழலில் ஏவுகணைச் சோதனைகளை நடத்தி அனைவரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது வடகொரியா.
சீனாவுக்கு மிக நெருக்கமான வடகொரியா எவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படாமல் இருக்கும் என்று உலக நாடுகள் கேள்வி எழுப்பியபோது, நாங்கள் வைரஸ் பரவல் தொடங்கிய உடனேயே எல்லையை மூடிவிட்டோம் என்று வடகொரியா விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை