கனடா பிரதமரின் குடியிருப்புக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த நபர் கைது
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குடியிருப்புக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த நபர் கைது செய்யப்பட்டார்.
கனடா தலைநகர் ஒட்டாவில் ரைடோ ஹாலில் அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ , மாகாண ஆளுநர் ஜூலி பேயட்டின் குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை காரில் வந்த நபர் ஒருவர் ரைடோ ஹாலின் நுழைவு வாயில் கதவை காரை கொண்டு மோதி சேதப்படுத்தினார். அதன் பின்னர் வளாகத்துக்குள் நுழைந்த அந்த நபர் கையில் துப்பாக்கியுடன் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் குடியிருப்பை வேகமாக சென்றார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த
பொலிஸார் விரைந்து செயல்பட்டு அந்த நபரை மடக்கிப் பிடித்தனர். அதனைத் தொடர்ந்து அவரது காரை பரிசோதனை செய்ததில் அதில் இரண்டு துப்பாக்கிகள் இருந்தன. இதையடுத்து பொலிஸார் அந்த நபரை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர் ஒரு ராணுவ வீரர் என்பது தெரியவந்தது. எனினும் அவரது பெயர் உள்ளிட்ட விவரங்களை பொலிஸார் வெளியிடவில்லை. அதேபோல் அவர் எதற்காக பிரதமரின் குடியிருப்புக்குள்
ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்தார் என்பது குறித்தும் பொலிஸார் தெரிவிக்கவில்லை.
இந்த சம்பவத்தின்போது
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஆளுநர் ஜூலி பேயட் அவர்களது குடும்பத்தினர் யாரும் அந்த குடியிருப்பில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை