• Breaking News

    சீனாவிடமிருந்து ஒதுங்கியிருப்பதுதான் நல்லது இம்ரான் கானுக்கு ஆலோசனை

     சீனாவிடமிருந்து  பாகிஸ்தான் ஒதுங்கியிருப்பதே தற்போதைய சூழலில் நல்லது என்று பாக். பிரதமர் இம்ரான் கானுக்கு அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் ஆலோசனை வழங்கியிருப்பதாக பாகிஸ்தான்  ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    இந்தியா-சீனா எல்லை விவகாரத்தில் சீனா அத்துமீறி வருவதாக பல நாடுகளும் குற்றம்சாட்டி வரும் நிலையில், சீன-பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். இதில் காஷ்மீர் உள்ளிட்ட விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாக இருநாட்டு வெளியுறவு அமைச்சகங்களும் செய்தி வெளியிட்டிருந்தது.

    இந்நிலையில் பாக். ஊடகங்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

    கரோனா வைரஸ் விவகாரம், இந்தியாவுடனான  எல்லைப் பிரச்சின  உள்ளிட்டவற்றில் உலக நாடுகள் சீனா மீது கடும் அதிருப்தியில் உள்ளன. சீனாவை தனிமைப்படுத்தும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன.

    சமீபத்தில் பாகிஸ்தான்  விமானங்களுக்கு ஐரோப்பிய யூனியன் தடை விதித்தது. சீனாவுடனான பாகிஸ்தானின் நட்பே இதற்குக் காரணம் என்று அறியப்படுகிறது.

    மேலும் சீனா-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதை திட்டத்தில் சீனாதான் அதிகமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பாகிஸ்தானுக்கு இதனால் பயனில்லாமல் வேலைக்கு சீனாவிலிருந்தே ஆட்களை அழைத்து வருவதாகவும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இதனால் பலூசிஸ்தான், கில்ஜித் மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

    சீனாவில் உய்குர் முஸ்லிம் சிறுபான்மையினரை மதரீதியாக அடக்குமுறை செய்வதும் பாகிஸ்தானின் சீனா மீதான பாசத்தை மக்களிடையே கேள்விகளை எழுப்பி வருகிறது.

    இந்தியா, பூடான் இடையே எல்லையில் சில பகுதிகளை உரிமை கோரும் சீனா நாளை பாகிஸ்தானிடத்திலும் இதே வேலையைக் காட்ட வாய்ப்பிருக்கிறது.

    எனவே சீனாவுடனான உறவைப் பாகிஸ்தான்  மறுபரிசீலனை செய்ய வேண்டும், இல்லையெனில் உலகநாடுகள் சீனாவை தனிமைப்படுத்தும் போது பாகிஸ்தானையும் தனிமைப்படுத்தி விடுவார்கள், என்று வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் தரப்பில் இம்ரான் கானுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக பாக். ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad