மரண தண்டனையை எதிர்த்து மனு தாக்கல் செய்ய குல்பூஷன் ஜாதவ் மறுப்பு
மரண தண்டனையை எதிர்த்து மனு தாக்கல் செய்ய, முன்னாள் இந்திய கடற்படை அதிகாரி, குல்பூஷன் ஜாதவ் மறுத்து விட்டதாக, பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.முன்னாள் இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ், பலுாசிஸ்தானில் உளவு பார்த்தார் என்ற குற்றச்சாட்டில், 2016ல், பாகிஸ்தான் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்.கடந்த, 2017ல் பாகிஸ்தான் இராணுவ நீதிமன்றம், அவருக்கு மரண தண்டனை விதித்தது. இந்நிலையில், அவர் இந்திய துாதரகத்தை அணுகவும், தண்டனையை மறு ஆய்வு செய்யவும், சர்வதேச நீதிமன்றம், கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
இதற்கிடையே, மரண தண்டனையை எதிர்த்து, மறு சீராய்வு மனு தாக்கல் செய்ய, குல்பூஷன் ஜாதவ் மறுத்து விட்டதாக, பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அந்நாட்டின் கூடுதல் அட்டர்னி ஜெனரல் அகமது இர்பான், செய்தியாளர்களிடம் கூறியதாவது:குல்பூஷன் ஜாதவ், அவரது தாய் மற்றும் மனைவியை ஏற்கனவே சந்தித்துள்ளார். தந்தை மற்றும் மனைவியை சந்திக்க, தற்போது அனுமதித்துஉள்ளோம். தண்டனைக்கு எதிர்த்து, மறு சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக, பாக்., அரசு புதிய ஆணையை பிறப்பித்துள்ளது. இதன்படி, குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே, மறுசீராய்வு மனு அனுமதிக்கப்படும் என்பதால், மரண தண்டனைக்கு எதிராக மனு தாக்கல் செய்யும்படி, கடந்த மாதம் 17ம் தேதி, குல்பூஷன் ஜாதவிடம் கூறினோம். அதற்கு மறுப்பு தெரிவித்த அவர், தன் கருணை மனுவை பரிசீலிக்க விரும்புகிறார்.இஸ்லாமபாத் உயர் நீதிமன்றத்தில், குல்பூஷன் மட்டுமின்றி, அவரது பிரதிநிதி அல்லது இந்திய துாதரக அதிகாரிகள் தரப்பில், சீராய்வு மனு தாக்கல் செய்யலாம்.சர்வதேச கடமைகளை உணர்ந்துள்ள பாக்., சர்வதேச நீதிமன்ற உத்தரவை, முழுமையாக பின்பற்றுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை