ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை, மும்பை, பெங்களூரு அணி வீரர்கள் துபாய் சென்றனர்
எட்டு அணிகள் பங்கேற்கும் 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 19-ஆம் திகதி முதல் நவம்பர் 10-ஆம் திகதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி முன்னாள் சம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு, சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் 5 நாட்கள் பயிற்சி முகாம் நடந்தது. கப்டன் டோனி, துணை கப்டன் சுரேஷ் ரெய்னா, முரளிவிஜய், கரண் ஷர்மா, தீபக் சாஹர், அம்பத்தி ராயுடு, ஜெகதீசன், பியுஷ் சாவ்லா, கேதர் ஜாதவ், மோனுகுமார், ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.
விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியினரும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியினரும் நேற்று துபாய் புறப்பட்டனர். ரோகித் சர்மா தனது மனைவி, மகளையும் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளுக்குட்பட்டு அழைத்து சென்றார். ஏற்கனவே பஞ்சாப், ராஜஸ்தான், கொல்கத்தா அணியினரும் அங்கு சென்று விட்டனர். எஞ்சிய ஐதராபாத், டெல்லி அணி வீரர்கள் ஓரிரு நாட்களில் கிளம்ப உள்ளனர்.
கருத்துகள் இல்லை