• Breaking News

    ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோற்றது


     சஞ்சு சாம்ஸனின் முரட்டுத்தனமான துடுப்பாட்டம், ஸ்மித்தின் அதிரடி ஆகியவற்றால் ஷார்ஜாவில் நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 4-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி.

    முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான்   20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 216  ஓட்டங்கள் சேர்த்தது. 217 ஓட்டங்கள் சேர்த்தால் வெற்றி எனும் இமாலய இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 200 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. 20 ஆவது ஓவரில் லுங்கிடி கொடுத்த 30 ஓட்டங்களும் சென்னையின் தோல்விக்கு காரணம்.

    சார்ஜாவில் நேற்றிரவு நடந்த  4-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்ஸும், ராஜஸ்தான் ரோயல்ஸும் மோதின. சென்னை அணியில் ஒரே ஒரு மாற்றமாக உடல்தகுதியுடன் இல்லாததால் முந்தைய ஆட்டத்தின் ‘ஹீரோ’ அம்பத்தி ராயுடுவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, கொரோனாவில் இருந்து மீண்ட ருதுராஜ் கெய்க்வாட் சேர்க்கப்பட்டார். நானயச்சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை கப்டன் டோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.


    டாஜஸ்தான் கப்டன் ஸ்டீவன் ஸ்மித்தும், புதுமுக வீரர் ஜெய்ஸ்வாலும்   தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர்.  ஸ்டீவ்  ஸ்மித் தனது 13 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் ஒருமுறை கூட தொடக்க வீரராக களமிறங்கியதில்லை. ஸ்மித் இதுவரை 551 இன்னிங்ஸ்களில் பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியபோதிலும், பல்வேறு நிலையில் களமிறங்கினார். ஆனால் தொடக்கவீரராக மட்டும் களமிறங்கியதில்லை. முதல்முறையாக ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகக் களம் இறங்கினார்

    ஜெய்ஸ்வால் (6 ஓட்டங்கள்) தீபக் சாஹரின் ஷாட்பிட்ச் பந்து வீச்சில் அவரிடமே பிடிபட்டார். இதைத் தொடர்ந்து விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன், ஸ்டீவன் ஸ்மித்துடன் கைகோர்த்தார்.

    இருவரும் சென்னை பந்து வீச்சை துவம்சம் செய்தனர். குறிப்பாக சஞ்சு சாம்சன் சிக்சர் மழை பொழிந்தார். ஜடேஜாவின் ஒரு ஓவரில் 2 மெகா சிக்சர் தூக்கிய அவர், மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் பியுஷ் சாவ்லாவின் பந்து வீச்சில் 3 சிக்சர் தெறிக்க விட்டு, மிரள வைத்தார். அத்துடன் 19 பந்துகளில் அரைசதத்தை கடந்து அசத்தினார். ஸ்மித்தும்  பந்துகளை எல்லைக்கோட்டுக்கு துரத்தியடிக்கஓட்ட எண்ணிக்கை 11-க்கு மேல் எகிறியது. இந்த கூட்டணியை உடைக்க சென்னை கப்டன் டோனி ரொம்பவே சிரமப்பட்டு போனார்.

    ராஜஸ்தான் 11.4 ஓவர்களில் 132  ஓட்டங்கள் எடுத்தபோது  சஞ்சு சாம்சன் 74 ரன்களில் (32 பந்து, ஒரு பவுண்டரி, 9 சிக்சர்) ஆட்டமிழந்தார்.சஞ்சு சம்சன், ஸ்மித் ஜோடி57 பந்துகளில் 121 ஓட்டங்கள் எடுத்து ராஜஸ்தானின் வெற்றிக்கு அடித்தளமிட்டது.


     அடுத்த வந்த டேவிட் மில்லர் (0) அதே ஓவரில் ரன்-அவுட் ஆனார். இதன் பின்னர் ராஜஸ்தானின் ஓட்ட வேகம் சற்று தணிந்ததுடன், விக்கெட்டுகளும் விழுந்தன. 19-வது ஓவரில் கப்டன் ஸ்டீவன் ஸ்மித் 69 ஓட்டங்களில் (47 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டம் இழந்தார். 230 ஓட்டங்களை நெருங்குவது போல் சென்ற அவர்களின் உத்வேகத்தை 13-வது ஓவருக்கு பிறகு சென்னையின் பந்து வீச்சாளர்கள்   ஓரளவு கட்டுப்படுத்தினர். ஆனாலும் கடைசி ஓவரில் நிகிடி வாரி வழங்கி 200 ஓட்டங்களைக் கடக்கச் செய்தார்.. நிகிடி வீசிய இந்த ஓவரில் ஜோப்ரா ஆர்ச்சர் தொடர்ச்சியாக 4 சிச்சர் விளாசி வியப்பூட்டினார். இதனால் நடப்பு தொடரில் 200 ஓட்டங்களை கடந்த முதல் அணி என்ற பெருமையை ராஜஸ்தான் பெற்றது. நிகிடி கடைசி ஓவரில் 2 நோ-பால், வைடு உள்பட மொத்தம் 30  ஓட்டங்களை வாரி வழங்கினார்.

    இங்கிடி வீசிய கடைசி ஓவரை  ஆர்ச்சர் நொறுக்கி எடுப்பார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. தொடர்ந்து 4 சிக்ஸர்கள் உள்பட 30 ஓட்டங்கள் சேர்க்கப்பட்டது. ஐபிஎல் வரலாற்றில் ஒரே ஓவரில் அதிகமான ஓட்டங்கள் கொடுத்த வீரர்கள் பட்டியில்ல இங்கிடி இணைந்தார். இதற்கு முன் அசோக் டிண்டா, கிறிஸ் ஜோர்டான் இருந்தநிலையில் 3-வது வீரராக இங்கிடி இணைந்தார்

    20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 216 ஓட்டங்கள் குவித்தது. ஜோப்ரா ஆர்ச்சர் 27 ஓட்டங்களுடனும் (8 பந்து, 4 சிக்சர்), டாம் கர்ரன் 10 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். சென்னை தரப்பில் சாம் கர்ரன் 3 விக்கெட்டுகளும், தீபக் சாஹர், நிகிடி, பியுஷ் சாவ்லா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

    அடுத்து 217 ஓட்டங்கள் இலக்கை நோக்கி சென்னை அணி விளையாடியது. பவர்-பிளே வரை தாக்குப்பிடித்த தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன் 33 ஓட்டங்களிலும்(21 பந்து, 1 பவுண்டரி, 4 சிக்சர்), முரளிவிஜய் 21 ஓட்டங்களிலும் (21 பந்து, 3 பவுண்டரி) ஆட்டமிழந்தனர்.


    இமாலய ஸ்கோரை பார்த்து மலைத்து போன சென்னை அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் சரிந்தன. பாப் டு பிளிஸ்சிஸ் மட்டும் கடுமையாக போராடினார். உனட்கட்டின் ஒரே ஓவரில் 3 சிக்சர் விரட்டியடித்தார். அவரது அதிரடியால்ஓட்ட எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது. பிளிஸ்சிஸ் 72 ஓட்டங்களில் (37 பந்து, ஒரு பவுண்டரி, 7 சிக்சர்)  ஆட்டமிழந்தார்.

    அதே சமயம் தடுமாற்றத்துடன் ஆடிய கேப்டன் டோனி, டாம் கர்ரன் வீசிய கடைசி ஓவரில் ‘ஹாட்ரிக்’ சிக்சர் அடித்து ஆறுதல் அளித்தார். 20 ஓவர்களில் சென்னை அணியால் 6 விக்கெட்டுக்கு 200 ஓட்டங்களே சேர்க்க முடிந்தது.

    இதன் மூலம் ராஜஸ்தான் அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டோனி 29 ஓட்டங்களுடன் (17 பந்து, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். 2-வது ஆட்டத்தில் ஆடிய சென்னை அணிக்கு இது முதலாவது தோல்வியாகும்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad