கொல்கத்தாவுக்கு முதல் வெற்றி
அபுதாபியில்
நடந்த 8-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் ஐதராபாத் சன்ரைசர்ஸும், கொல்கத்தா
நைட் ரைடர்ஸும் மோதின. கொல்கத்தா அணியில் சந்தீப் வாரியர், நிகில் நாயக் நீக்கப்பட்டு
வருண் சக்ரவர்த்தி, கம்லேஷ் நாகர்கோட்டி சேர்க்கப்பட்டனர். ஐதராபாத் அணியில் மிட்செல்
மார்ஷ், விஜய் சங்கர், சந்தீப் ஷர்மா ஆகியோருக்கு பதிலாக முகமது நபி, விருத்திமான்
சஹா, கலீல் அகமது இடம் பிடித்தனர்.
இரண்டு அணிகளும் விளையாடிய முதல் போட்டியில் தோல்வியடைந்தன.ஆகையால் புள்ளிப் பட்டியலில் முன்னேறுவதற்கு இப் போட்டி வாய்ப்பாக அமைந்தது. சுப்மான் கில், மோர்கன் ஜோடியின் துடுப்பாட்டமும், கட்டுக்கோப்பான பந்துவீச்சும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தது.
நானயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஐதராபாத் கப்டன் டேவிட்
வார்னர் முதலில் துடுப்படுத்தாட முடிவு செய்தார். ஹைதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட
20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 142 ஓட்டங்கள் அடித்தது.143 ஓட்டங்கள் அடித்தால்
வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18 ஓவர்களில் 3 விக்கெட்
இழப்புக்கு 145 ஓட்டங்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
டேவிட் வானரும், ஜானி பேர்ஸ்டோவும் ஐதராபாத் அணியின்
தொடக்க வீரர்களாக அடியெடுத்து வைத்தனர். கொல்கத்தா பவுலர்கள் கட்டுக்கோப்பான பந்து
வீச்சால் அவர்களை தடுமாற வைத்தனர்.
வார்னர் (36 ஓட்டங்கள், 30 பந்து, 2 பவுண்டரி, ஒரு
சிக்சர்), தமிழக சுழற்பந்து வீச்சாளர் வருண்சக்ரவர்த்தியின் பந்து வீச்சில் அவரிடமே
பிடிப்பட்டார். இதைத் தொடர்ந்து மனிஷ் பாண்டேவுடன், விருத்திமான் சஹா இணைந்தார். முதல்
10 ஓவர்களில் ஓட்ட எண்ணிகை 6 வீதம் என்று மந்தமாகவே நகர்ந்தது.
இதன் பின்னர் இருவரும் ஓட்ட விகிதத்தை அதிகரிக்க முடிந்தவரை
முயற்சித்தனர். ஆனால் பெரிய அளவில் அதிரடியை காட்ட முடியவில்லை. பாண்டே தனது பங்குக்கு 51 ஓட்டங்கள்
(38 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சஹா 30 ஓட்டங்களில்
(31 பந்து) ரன்-அவுட் ஆனார்.
20 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 4 விக்கெட் இழப்புக்கு 142 ஓட்டங்கள் எடுத்தது. கொல்கத்தா தரப்பில் கம்மின்ஸ், வருண் சக்ரவர்த்தி, ரஸ்செல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
குறிப்பாக முந்தைய ஆட்டத்தில் வாரி வழங்கிய ரூ.15½ கோடிக்கு
ஏலத்தில் எடுக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் இந்த போட்டியில் சிறப்பாகச்
செயற்பட்டார்.
143 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணியில் தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில் நிலைத்து நின்று ஆடினார். மற்றொரு தொடக்க வீரர் சுனில் நரின் (0), அடுத்து வந்த நிதிஷ் ராணா (26), கப்டன் தினேஷ் கார்த்திக் (0) குறுகிய இடைவெளியில் வெளியேறினர். ரஷித்கான் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆன தினேஷ் கார்த்திக், டி.ஆர்.எஸ். படி அப்பீல் செய்தும் பலன் இல்லை. இதைத் தொடர்ந்து சுப்மான் கில்லும், இயான் மோர்கனும் கைகோர்த்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். அபாரமாக ஆடிய சுப்மான் கில் அரைசதம் விளாசினார். மோர்கன் சிக்சர், பவுண்டரியுடன் இலக்கை எட்ட வைத்தார்.
. 53 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தா
அணி தடுமாறியது. ஆனால், 4-வது விக்கெட்டுக்கு சுப்மான் கில், மோர்கன் ஜோடி ஆட்டத்தைக்
கையில் எடுத்தனர். பவர்ப்ளேயில் கொல்கத்தா 2 விக்கெட் இழப்புக்கு 53 ஓட்டங்கள் சேர்த்தது.
சன்ரைசர்ஸ் அணியின் அனைத்து வீரர்களின் பந்துவீச்சையும்
இருவரும் அடித்து துவம்சம் செய்தனர். இருவரின் விக்கெட்டையும் சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்களால்
கடைசி வரை பிரிக்க முடியவில்லை.
அதிரடியாக ஆடிய கில் 42 பந்துகளில் அரை சதம் அடித்தார். துணையாக ஆடிய மோர்கன், தனது அனுபவத்தால், ஸ்கோரை மெதுவாக உயர்த்தி வெற்றிக்குத் துணையாகஇருந்தார்.
கொல்கத்தா அணி 18 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 145 ஓட்டங்கள்
எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சுப்மான் கில் 70 ஓட்டங்களுடனும்
(62 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), மோர்கன் 42 ஓட்டங்களுடனும் (29 பந்து, 3 பவுண்டரி,
2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இருவரும் சேர்ந்து 92 ஓட்டங்கள் சேர்த்தனர்.
ஆட்ட நாயகன் விருது சிப்மான் கில்லுக்கு வழங்கப்பட்டது/
கொல்கத்தா அணிக்கு இது முதலாவது வெற்றியாகும். தொடக்க
ஆட்டத்தில் மும்பை இந்தியன்சிடம் தோற்று இருந்தது. அதே சமயம் நடப்பு தொடரில் இன்னும்
வெற்றிக்கணக்கை தொடங்காத ஒரே அணியான ஐதராபாத்துக்கு இது 2-வது தோல்வியாகும்.
கருத்துகள் இல்லை