பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழில் ஆர்ப்பாட்டம்!
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழில் ஆர்ப்பாட்டம்!
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, இன்று யாழ். வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை முன்பாக மக்கள் மற்றும் அரசியல்வாதிகளால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
அரசாங்கத்தின் பல்வேறு நடவடிக்கைகளை கண்டித்து, குறிப்பாக எரிபொருள் விலையேற்றம், விவசாயிகளுக்கான பசளை தட்டுப்பாடு, அரசியல் கைதிகளின் விடுதலை ,பேர்ள் கப்பல் விபத்தினால் மீனவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு, வெளிநாட்டவர்கள் ஆக்கிரமிப்பு, தமிழர்களின் காணி விடுவிப்பு போன்றவற்றினை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துக்கு முன்பாக பிரதேச சபை உறுப்பினர்களும் அரசியல்வாதிகளும் ஒன்று திரண்டு எரிபொருள் விலையேற்றத்தினை வெளிப்படுத்தும் வகையில் துவிச்சக்கர வண்டியில் தங்களுடைய பயணத்தினை ஆரம்பித்து கோஷங்கள் எழுப்பியவாறு வலி தென்மேற்கு பிரதேச சபை வரைக்கும் பேரணியாக வந்தனர்.
அங்கு ஒன்றுகூடிய வலி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களும் அரசியல் தலைவர்களும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோஷங்களையும் எழுப்பி சுலோக அட்டைகளையும் தாங்கியிருந்த இப்போராட்டத்தில், வலி தென்மேற்கு பிரதேச சபையைச் சேர்ந்த ஆளுங்கட்சி உறுப்பினர்களும் ஐக்கிய தேசிய கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈஸ்வரபாதம் சரவணபவன் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
கருத்துகள் இல்லை