ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெள்ளைக் கொடி காட்டியது இலங்கை அரசாங்கம்!
தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்து ஜி.எஸ்.பி. வரிச்சலுகைக்காக அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெள்ளைக்கொடி காண்பித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்செகா தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதில் எமக்கு எவ்வித சிக்கலும் கிடையாது. காரணம் தற்போது சிறையிலிருப்பவர்கள் 15 ஆண்டுகளுக்கு முன்னர் தமது இளமைப்பருவத்தில் தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களாவர்.
ஆனால் தற்போது அவர்கள் அந்த மனநிலையிலிருந்து மீண்டிருக்கக் கூடும். எனவே அவர்களில் விடுதலை செய்யக் கூடியவர்களை விடுப்பதற்கும் , புனர்வாழ்வளிக்கப்பட வேண்டியவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதில் எவ்வித சிக்கலும் இல்லை.
என்மீது தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொள்ள உதவிய மொரிஸிடமிருந்து இதனை ஆரம்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். அவரை விடுதலை செய்தால் வரவேற்பதற்கு நான் தயாராக இருக்கின்றேன்.
எவ்வாறிருப்பினும் ஜி.எஸ்.பி. வசிச்சலுகை அரசாங்கத்தின் கழுத்தை நெரித்தமையே இந்த விடுதலையின் பின்னணியாகும். அதனாலேயே அரசியல் கைதிகளை விடுதலை செய்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அரசாங்கம் வெள்ளை கொடி காண்பித்துள்ளது.
ஏதேனுமொரு வழியில் அரசியல் கைதிகளுக்கு விடுதலை கிடைத்துள்ளமை வரவேற்கத்தக்கது. ஆனால் இவர்களுடன் சேர்த்து துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டுள்ளமை ஹிருணிகா பிரேமசந்திரவிற்கும் , அவரது குடும்பத்திற்கும் உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். அவரது விடுதலைக்கு அரசாங்கமே பொறுப்பு.
அவ்வாறெனில் ஹிருணியாவின் உயிர் அச்சுறுத்தலுக்கும் அரசாங்கமே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். ஐந்து நபர்கள் கொல்லப்பட்ட குற்றச்சாட்டில் தண்டணை அனுபவித்து வந்த ஒரு நபர் நீதியரசர்களின் தீர்ப்பிற்கு முரணாக 6 வருடங்களில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதே நிலைமை தொடருமானால் எந்தவொரு மனித படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளியும் விரைவில் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியும் என்ற நிலைமை நாட்டில் உருவாகிவிடும் என்றார்.
கருத்துகள் இல்லை