மீண்டும் வெள்ளைவான் கடத்தலா? பொலிஸாரிடம் சிக்கிய ஆதாரங்கள்!
வெள்ளைவானில் நபர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வௌ்ளை வானில் வந்த சிலர் தனது கணவரை கடத்தி சித்திரவதை செய்து வீதியில் விட்டுச் சென்றுள்ளதாக நுரைச்சோலை பனியடி பிரதேச பெண் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இராணுவ உடைக்கு ஒத்த உடை அணிந்த நபர்களே இவ்வாறு தனது கணவரை கடத்திச் சென்றதாக குறித்த பெண் நுரைச்சோலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
நேற்று நள்ளிரவு தனது வீட்டுக்கு வந்த இராணுவ சீருடையை ஒத்த சீருடை அணிந்த நால்வரும் சிவில் உடையில் வந்த ஒருவரும் இராணுவ அதிகாரி ஒருவரின் மனைவிக்கு குறுந்தகவல் அனுப்பியதாகக் கூறிக்கேட்டதுடன் கணவரை கடத்திச் சென்றாகவும் குறித்த பெண் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
கடத்தப்பட்ட நபர் 38 வயதான ராஜா சிறிகாந்தா என்பவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கடத்தப்பட்ட நபர் கடுமையாக தாக்கப்பட்டு இளந்தடி கடற்பரப்பில் விட்டுச் செல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வௌ்ளை வான் புத்தளம் ரயில் வீதி பகுதியில் விபத்துக்கு உள்ளான நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன் அதில் இருந்து இராணுவ சீருடை, தொப்பி, அடையாள அட்டை, சாரதி அனுமதிப் பத்திரம், பணம் போன்றவை மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை