யாழில் முறைப்பாடு வழங்கியும் பயனில்லை; தேசிய பொலிஸ் ஆணைக்குழுவை நாடிய வர்த்தகர்
யாழ்.பொலிஸ் நிலையத்தில் 6 முறைப்பாடுகள் பதிவு செய்தும் பயனேதும் கிட்டாத நிலையில் யாழ் வர்த்தகர் ஒருவர் தேசிய பொலிஸ் ஆணைக் குழுவிடம் நீதிகேட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், யாழ்.நகரப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றை பிற மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு முறைப்பாட்டாளரான குறித்த நபர் வாடகைக்கு வழங்கியுள்ளார். கடையை வாடகைக்கு பெற்றுக்கொண்டவர் வழங்கியவரான முறைப்பாட்டாளரின் அனுமதியின்றி கடையை விஸ்தரித்து மட்டுமல்லாது ஏனைய பிற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார்.
இதனை அறிந்த அக் கடையை வாடகைக்கு வழங்கியவர் 16/07/2020 யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டைவழங்க சென்றிருந்த நிலையில் குறித்த திகதியில் பொலிஸார் முறைப்பாட்டை ஏற்க மறுத்துவிட்டனர். 17.07.2020 அன்று முறைப்பாட்டை பதிவு செய்ய பொலிசார் சம்மதித்த நிலையிலும் முறைப்பாட்டாளரால் வழங்கப்பட்ட முறைப்பாட்டில் பல விடயங்களை பொலிஸார் எழுத மறுத்து விட்டதாக கூறப்படுகின்றது.
முறைப்பாட்டை பெற்றுக்கொண்ட பொலிசார் 14.10.2020 வரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காத காரணத்தினால், குறித்த நபர் மறுநாள் யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் சென்று முறையிட்டதன் பயனாக முழு முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டது. அதன்பின்னர் முறைப்பாடு தெரிவித்ததும் விசாரணைக்கு வருவார்கள் என நினைத்திருந்த நிலையில் பொலிஸார் வராத காரணத்தால் மீண்டும் பொலிஸ் நிலையம் சென்று தனது முறைப்பாடு தொடர்பில் பொலிஸாரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
எனினும் பொலிசார் விசாரணை செய்யாமல் எழுந்து சென்றுவிட்டதாக பாதிக்கப்பட்டவர் கூறியுள்ளார். அதோடு தனது முறைப்பாட்டின் விசாரணைகளை கிடப்பில் போட்ட பொலிஸார் எதிராளியின் முறைப்பாட்டினை பதிவு செய்வதில் அக்கறையாக இருந்ததாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் 16.09.2020 இல் இருந்து யாழ்.பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் அதிகாரியின் நடவடிக்கையால் வர்த்தக நிலையம் மூடப்பபட்டிருப்பதுடன் விசாரணைகளை நீர்த்துப்போகச் செய்வதற்காக பொலிஸாரின் ஆலோசனையின் பிரகாரம் பல்வேறு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த நிலையில் தனக்குரிய நீதியை பெற்றுத் தருமாறு கோரி பாதிக்கப்பட்டவர் இலங்கை பொலிஸ் ஆணைக்குழுவின் யாழ்.மாவட்ட அலுவலகத்தை நாடியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை